‛மோடி பேராசை படக்கூடாது’.. தமிழகத்தில் காங்கிரஸ் + திமுக கூட்டணி முறிவா? கார்த்தி சிதம்பரம் பதிலடி
சென்னை: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து திமுக வெளியே வர முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கிறதா? என பிரதமர் மோடி கேட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சாம் பிட்ரோடா. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக செயல்பட்டு வந்தார். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.

ராகுல் காந்தியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சாம் பிட்ரோடா தான் தயாரித்து வந்தார். இந்நிலையில் தான் சாம் பிட்ரோடா கூறும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும்.
அந்த வகையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாம் பிட்ரோடா தோல் நிறத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்தது பெரும் பஞ்சாயத்தை உருவாக்கியது. இதனை கப்பென பாஜகவினர் பிடித்து கொண்டனர். அதாவது ஊடகத்துக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், ‛‛இந்தியா பன்முக தன்மை கொண்ட ஜனநாயக நாடு. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்'' என தெரிவித்து இருந்தார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மோடி முதல் பாஜகவின் பல தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து பற்றி நேற்று தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
ஆந்திரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‛‛சாம் பிட்ரோடா ராகுல் காந்தியின் ஆலோசகராக இருக்கிறார். அவரது கருத்தை தென்னிந்தியாவில் முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா (கர்நாடகா), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) ஏற்றுக்கொள்வார்களா?. அதோடு நாள்தோறும் தமிழர்களின் கலாசாரம், பெருமை பற்றி பேசும் ஸ்டாலின் இந்த கூற்றை ஏற்கிறாரா? தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சி உடனான உறவை அவர் முறித்து கொள்வாரா? அதற்கான துணிச்சல் ஸ்டாலினிடம் இருக்கிறதா?. பிரித்தாள்வது தான் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியாக இருக்கிறது'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் தான் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறிவு தொடர்பாக பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை சூளைமேட்டில் இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛காங்கிரஸ் கூட்டணியை திமுக முறிக்குமா?'' என பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கார்த்தி சிதம்பரம், ‛‛ஆசை, பேராசை, அல்பஆசை எல்லாம் பிரதமருக்கு இருக்கலாம். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறபோகிறது. எந்த காரணத்துக்காக நாங்கள் கூட்டணியை முறிக்க வேண்டும்? வாய்ப்பே இல்லை'' என பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications