ரிப்பன் பில்டிங் அருகே போலீசார் குவிப்பு.. சற்று நேரத்தில் தூய்மை பணியாளர்கள் அகற்றம்?
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை வெளியே தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடப்பதாகவும், எனவே, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனையடுத்து ரிப்பன் மாளிகை வெளியே நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மறுபுறம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் 15 மண்டலங்கள் இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தூய்மை பணிகள் காண்ட்ராக்ட் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மண்டலம் 5,6 ஆகியவற்றில் பணியாற்றும் சுமார் 1953 தூய்மை பணியாளர்களை கான்டிராக்ட் பணியாளர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள், பெருநகர மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக தூய்மை பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் எங்களை பணியிலிருந்து நீக்கும் அபாயம் இருக்கிறது. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி காலம் காலத்திற்கும் இருக்கும். இப்படியான நீண்ட கால பணிகளை தனியார்மயத்திற்கு கொடுப்பது ஏற்புடையதல்ல. எனவே மாநகராட்சியே இந்த பணியை ஏற்று நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருடன் போராட்டக்குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண்.285ல் ஊராட்சிகள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டும் போராட்டக்குழுவினர், எங்கள் கோரிக்கைகளை உடனடியாக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், போராட்டம் நடத்த அனுமதி பெறாமல் ரிப்பன் மாளிகை வாசலில் சட்டவிரோதமாக தூய்மை பணியாளர்கள் போராடி வருவதாகவும், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவ்வாறே தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த அனுமதித்தது. இதனையடுத்து, அவர்களை அப்புறப்படுத்த நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications