‛திமுக, அதிமுக வேண்டாம்’.. பாஜக கூட்டணியில் சரத்குமார்? சமக ஆலோசனை கூட்ட தீர்மானத்தை கவனிச்சீங்களா?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது அவர் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தமட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில் தான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக, பாஜக உள்பட பிற கட்சிகளும் கூட்டணியை வலுவாக அமைப்பதற்கான பணிகளை செய்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியை பொறுத்தமட்டில் வழக்கம்போல் சீமான் தனித்து களமாட உள்ளார்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முதல் தீர்மானம் என்பது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்குவதாகும். மேலும் படிப்படியாக தமிழகத்தில் மதுவிற்பனையை குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், சென்னை புறநகரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்ல ரயில், பஸ் வசதிகளை அரசு செய்து தர வேண்டும், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை முழுமையாக வரவேற்கிறோம் என்பன உள்பட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றதன் மூலம் சமத்துவ மக்கள் கட்சி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. அதோடு தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அப்பாற்பட்டு பாஜகவுடன் நெருக்கம் காட்ட சரத்குமார் விரும்புவதை இந்த தீர்மானம் உறுதி செய்கிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சரத்குமார் கட்சி இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications