விஜய் அரசு மீதான முதல் ஊழல் புகார்.. "பவுடர்" சர்ச்சையில் சிக்கினாரே அதே சரத்குமார் தொகுதியில் தான்!
சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிரான முதல் ஊழல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் தொகுதியில் சிலை தொடர்பான விவகாரத்தில் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்த தொகுதி எம்எல்ஏவான தவெக அமைச்சர் சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு தான் வேறு ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45.9 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.. குறிப்பாக, பணிகளுக்கான டெண்டர் பொதுவாக கோரப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக அறப்போர் இயக்கம் கூறியது.

ஊழல் புகார்
அதாவது கடந்த ஜூலை 29ம் தேதி தாம்பரத்தில் அசோகா பில்லர் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணிக்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் சிட்லபாக்கம் ரவுண்டானாவில் சிலை அமைக்கும் பணியும் டெண்டர் நடைமுறைக்கு முன்பே முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இரண்டு பணிகளின் மொத்த மதிப்பு ரூ.45.9 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பெரியளவில் சர்ச்சையாக வெடித்தது.
அறப்போர் இயக்கத்தின் புகாரை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு செய்யும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கமளித்திருந்தது.
சர்ச்சை
அறப்போர் இயக்கம் மேலும் தாம்பரம் மாநகராட்சியில் கடந்த நான்கு மாதங்களில் வெளியிடப்பட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த டெண்டர் விவகாரம் நடந்தது தாம்பரம் தொகுதி. அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் அமைச்சர் டி. சரத்குமார்! சொல்லப்போனால் அந்த சிலைகளை திறந்து வைத்தே இவர் தான். சமூக வலைத்தளங்களிலும் அவர் சிலைகளை திறந்து வைத்ததன் வீடியோக்கள் உள்ளன. இவர் வேறு யாரும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவுடர் சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர்!
வீடியோ
அதாவது சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் சரத்குமார் வெள்ளை நிற பொருளை செல்போன் மீது வைத்துக் கையாள்வது போன்ற காட்சிகள் இருந்தது. அது போதைப்பொருள் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் அதை திட்டவட்டமாக மறுத்த சரத்குமார், அது போதைப்பொருள் அல்ல என்றும், தனது குழந்தைக்கு கொடுப்பதற்காக மாத்திரையை பொடியாக்கியதாகவும் தெரிவித்தார். விளக்கம் கொடுத்த பிறகும் அந்த விவகாரம் முடியவில்லை. அவரது விளக்கம் குறித்தும் விவாதம் நடந்தது. மேலும், திமுகவினரும் மிக பெரியளவில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
தொடரும் சர்ச்சை
அந்த சர்ச்சை ஓய்வதற்கு உள்ளேயே இப்போது இந்த சர்ச்சை வெடித்துள்ளது. டெண்டர் விவகாரத்தில் இதுவரை அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது போல தெரியவில்லை. ஆனாலும், சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து பாவம் சரத்குமார் சர்ச்சையிலேயே சிக்கி வருகிறார் என்பதே அவரது ஆதரவாளர்களின் வருத்தமாக இருக்கிறது!


Click it and Unblock the Notifications
