பாஜகவில் ஐக்கியமான மறுநொடி.. மோடியின் குடும்பமாகவே மாறிய சரத்குமார்! இதை நோட் பண்ணீங்களா
சென்னை: தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்த சரத்குமார் உடனடியாக தனது எக்ஸ் பக்கத்தின் பெயரையும் அவர் மாற்றி இருக்கிறார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் லிஸ்டை எடுத்தால் அது ரொம்பவே பெரியது. எம்ஜிஆர், சிவாஜியில் தொடங்கி அது இப்போது விஜய் வரை நீண்டு இருக்கிறது. அப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தான் சரத்குமார்.

அவர் முதலில் திமுக சார்பு நிலைப்பாட்டையே எடுத்திருந்தார். இருப்பினும், பின்னர் திடீரென அதிமுகவில் இணைந்த அவர், அதிமுக சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சரத்குமார்: இருப்பினும், அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாஜக உடன் கூட்டணி என்று சரத்குமார் அறிவித்த நிலையில், இப்போது கட்சியையே பாஜகவில் இணைத்துள்ளார்.
மோடியின் குடும்பம்: இதற்கிடையே சமகவை பாஜக உடன் இணைத்த சரத்குமார் உடனடியாக தனது எக்ஸ் பக்கத்தின் பெயரையும் அவர் மாற்றி இருக்கிறார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் மோடியின் குடும்பமாகவே மாறிவிட்டார். அதாவது முன்பு அவரது எக்ஸ் பக்கத்தின் பெயர் R Sarath Kumar என்று மட்டுமே இருக்கும். இப்போது அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், மற்ற பாஜக தலைவர்களைப் போல R Sarath Kumar என்பதுடன் மோடியின் குடும்பம் என்பதையும் இணைத்து மோடியின் குடும்பமாகவே மாறிவிட்டது.
அவரது இந்த எக்ஸ் பக்க பெயர் மாற்றம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அது சரி பாஜகவினர் எதற்காக இப்படி மோடியின் குடும்பத்தினர் என்று தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துள்ளார்கள் தெரியுமா.. அது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்: பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாந்த் யாதவ், "குடும்ப ஆட்சி மோடி எதிர்க்கட்சிகளைப் பார்த்துப் பேசி வருகிறார்.. உங்களுக்குக் குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை ஏன் போகும் இடம் எல்லாம் சொல்லி வருகிறீர்கள்.. பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? உங்களுக்கு (மோடி) குடும்பம் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்" என்று அவர் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்தே பாஜக நிர்வாகிகள் பலரும் மோடியின் குடும்பம் என்பதை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் சேர்த்துக் கொண்டனர். பாஜகவில் ஐக்கியமான சரத்குமாரும் இப்போது அதையே செய்துள்ளார்.
சரத்குமார் அரசியல் பயணம்: சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சமகவை நடத்தி வருகிறார். தேர்தல் சமயங்களில் தனித்து போட்டி என அறிவித்தாலும் கடைசியில் கூட்டணி அமைத்தே களமிறங்குவார். அவர் பெரும்பாலும் அதிமுக கூட்டணியில்தான் போட்டியிட்டுள்ளார். குறிப்பாகக் கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் தான் சமக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2021ஆம் ஆண்டு அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications