’அம்மா என்றால் அன்பு’..அதெப்படி நீங்க சொல்லலாம்? பர்னிச்சரை போட்டுடைத்த சசிகலா? என்னாச்சு?
சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார் எனவும், இந்துத்துவா கொள்கை கொண்டவர் என பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது.
அண்ணாமலை: இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்திற்குள் யாரும் அடைக்க முடியாது என விகே சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிகலா கண்டனம்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சாதி, மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்
ஜெயலலிதா: புரட்சித்தலைவி அம்மா அவர்கள் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர் பேரறிஞர் அண்ண புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் இந்து, இஸ்லாமியர் கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மாதான் என்பது நாடறிந்த உண்மை.
அம்மா என்றால் அன்பு: சாதி மத பேதங்களை கடந்து ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். "அம்மா என்றால் அன்பு" என்ற தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புரட்சித்தலைவரை போன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
மறுக்க முடியாது: புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த அத்துனை மக்கள்நலத் திட்டங்களும் இன்றைக்கும் பயனளித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது அதிலும் குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாத்திடவும் அவர்களது நலனுக்காகவும் கொண்டு வந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் முத்திரை பதித்தவை என்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விடா முயற்சியால் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றதிற்காக 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து "சமூக நீதி காத்த வீராங்கனை" என்று போற்றப்பட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) May 25, 2024
முதல்வர் பதவிக்கு பெருமை: சத்துணவு தந்த சரித்திர நாயகன் வழிவந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உலகமே வியந்து பார்க்கும் வகையில் அம்மா உணவகம் தந்து எண்ணற்ற ஏழைகளின் பசியைப் போக்கிய அன்னலட்சுமியாக வாழ்ந்து காட்டினார். ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஆட்சி செய்து "முதல்வர்" என்ற பதவிக்கு பெருமை சேர்த்த உன்னத தலைவராக விளங்கினார். "ஜெ ஜெயலலிதா என்னும் நான்" என்று இந்த தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ, அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களது உரிமைகளை பறிகொடுத்து விடாமல் வாழமுடிந்தது. மேலும் மகிழ்ச்சியோடும். பாதுகாப்போடும் தமிழக மக்களால் இருக்க முடிந்தது.
அடைத்து விட முடியாது: ஏழை எளியவர்களுக்கு அம்மாவாக. அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்து இருந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications