பாமரர்களும் கருவறைக்குள் வந்து வழிபட வழிவகுத்து தந்தவர் பங்காரு அடிகளார்.. சசிகலா புகழ் அஞ்சலி
சென்னை: ஆதிபராசக்தி சித்தர் பீட தலைவர் மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். நானும் அம்மாவும் பலமுறை மேல்மருவத்தூருக்கு வந்து ஆசி பெற்றிருக்கிறோம் என்றும் பாமரர்களும் கருவறைக்குள் வந்து வழிவகுத்து தந்தவர் பங்காரு அடிகளார் என்று புகழாரம் சூட்டினார் சசிகலா.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறை இவர் ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடை இன்றி வழிபடலாம் என்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபட தொடங்கினர்.
தமிழ்நாடு மட்டுமல்லாடு வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு இருமுடி கட்டி வந்து வழிபட்டு செல்வார்கள்.
பங்காரு அடிகளாரின் உடல் நலம் கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆதிபராசக்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிசிக்சை பலனின்றி நேற்று மாலை பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. பங்காரு அடிகளார் மறைந்த தகவல் பரவியதை அடுத்து, ஆதிபராசக்தி பீடத்தின் பக்தர்களும் நிர்வாகிகளும் குடும்பத்தினரும் கதறி அழுதனர். தொடர்ந்து, ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில் நடை அடைக்கப்பட்டது.
ஆதிபராசக்தி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தகவல் அறிந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவர் வீட்டின் முன்பு அமர்ந்து அம்மா அம்மா என்று கதறி அழுதனர். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பாமரர்களும் கருவறைக்குள் சென்று வழிபடும் வகையில் ஆன்மீக புரட்சி ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டினார். நானும் அம்மாவும் நேரில் பலமுறை மேல்மருவத்தூருக்கு வந்து ஆசி பெற்று சென்றிருக்கிறோம் என்றும் தெரிவித்தார் சசிகலா. பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கும், அவரது பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் சசிகலா தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமானோர் மேல்மருவத்தூருக்கு வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று மாலையில் நடைபெற உள்ளது. 5.45 மணி அளவில் தியான மண்டபம் அருகில் சித்தர் முறைப்படி முக்தி செய்யப்படுகிறது. பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications