ஜெயிலையே பார்த்துட்டேன்.. இனி என்ன பயம்? அமித்ஷா தரப்பிற்கே பணியாத சசிகலா.. பறக்கும் பாஜக ஆஃபர்கள்
சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது.. குறிப்பாக, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளும், அதிகாரப் போட்டிகளும் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை.. இதற்கு நடுவில் சசிகலாவின் விஸ்வரூபமும், அவரது புதிய கட்சியும் பலவித எதிர்பார்ப்புகளை உண்டாக்கி உள்ளது.. அதுகுறித்த சில செய்திகளும் கசிந்து வருகின்றன...!
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சசிகலாவை அதிமுக கூட்டணியில் இணைத்து, தென் தமிழகத்தின் தேவர் சமூக வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய பாஜக மேலிடம் ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அது கைகூடவில்லை..

இப்போது மீண்டும் ஒரு தேர்தல் நெருங்கும் வேளையில், சசிகலாவை மையப்படுத்திப் புதிய அரசியல் மூவ் ஒன்று கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..
சிதறிய எதிர்ப்பாளர்கள் - தடம் மாறிய தலைவர்கள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு எதிராக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் எனப் பல முனைப் போட்டிகள் நிலவின.. இவர்கள் அனைவரும் எடப்பாடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் இணைந்திருந்தனர்..
கடந்த அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியின்போது சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், திடீரென தவெக கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதற்கிடையே, பாஜகவின் கடும் அழுத்தத்திற்குப் பணிந்த டிடிவி தினகரன், தான் யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கினாரோ, அதே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.. மற்றொருபுறம், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.. இதனால் சசிகலா மட்டும் அரசியல் களத்தில் தனித்து விடப்பட்ட சூழல் உருவானது..
சசிகலாவின் புதிய வியூகமும் பாஜகவின் ஆஃபரும்
ஆனால் தனித்து விடப்பட்டாலும் சோர்ந்து போகாத சசிகலா, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தனது புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.. பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் கொடியை ஏற்றியவர், கட்சியின் பெயரை அறிவிப்பதில் மட்டும் நிதானம் காட்டி வருகிறார்.. இதற்குப் பின்னால் பாஜகவின் 'டீலிங்' இருப்பதாகக் கூறப்படுகிறது..
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
சசிகலா தனிக்கட்சி தொடங்கினால் அது அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் முறையிட்டாராம்.. இதன் விளைவாக, அமித்ஷா தரப்பு சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன..
சில நேரங்களில் அன்பாகவும், சில நேரங்களில் மிரட்டும் தொனியிலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நீடிக்கிறதாம்.. "ஏற்கனவே சிறையை பார்த்துவிட்டேன், இனி புதிதாக எதுவும் நடக்கப்போவதில்லையே" என்று சசிகலா கறாராகவும், கெத்தாகவும் பதில் அளித்துள்ளதாகத் தெரிகிறது..
பாஜகவின் ஆஃபர்களும் சசிகலாவின் தயக்கமும்..
உடனே சசிகலாவை சமாதானப்படுத்த பாஜக சில ஆஃபர்களை முன்வைத்துள்ளதாம்.. அதாவது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி அல்லது அதற்கு இணையான அதிகாரம், தேர்தல் பி-பாரத்தில் கையெழுத்திடும் உரிமை மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகள் எனப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிக்கிறதாம்.. ஆனாலும், இத்தனை காலமும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், இப்போது பாஜகவின் இந்த திடீர் அணுகுமுறைகளையும், ஆஃபர்களையும் முழுமையாக நம்ப சசிகலா தயாராக இல்லையாம்..
எனினும், எடப்பாடியையும் சசிகலாவையும் ஒரே கூட்டணியில் வைப்பதன் மூலம் பாஜக நிறைய ரகசிய அரசியலை செய்கிறது என்று அதிமுக சீனியர்களே புலம்ப தொடங்கியுள்ளனராம்.. எப்படி பார்த்தாலும், சசிகலா எடுக்கப்போகும் முடிவுதான் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் என்பதால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!












Click it and Unblock the Notifications