எடப்பாடி பழனிசாமியை கைவிட்டதா டெல்லி?.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க பிளான்?.. பரபரக்கும் களம்
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுகிறது
சென்னை: அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பி வருகிறது.. அதேசமயம், இதற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை தலைமை என்ற விவகாரமே இப்போது மறைந்துபோய், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை மட்டுமே வெளிப்பட்டு, ஓபிஎஸ் பலவீனப்படுத்தப்பட்டு வருவதாக தென்மண்டலத்தில் சமீபகாலமாக பொருமல்கள் எழுந்து வருகின்றன.
எனினும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருந்த அதிமுகவுக்கும், இப்போதுள்ள அதிமுகவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தென்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடிகள் கூடிவருகின்றன..

எடப்பாடி
கொடநாடு விவகாரத்தில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதில் இருந்தே அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.. எப்போதும் சிரித்து கொண்டே பேட்டி தரும் எடப்பாடியார் சமீபகாலமாகவே டென்ஷனாகவே காணப்படுகிறார்.. கடுப்பாக பேசுகிறார்.. இதற்கெல்லாம் என்ன காரணம்? எப்படியும் கொடநாடு விவகாரத்தில் தன்னை டெல்லி மேலிடம் கை கொடுத்து காப்பாற்றும் என்று அதிகமாக எடப்பாடி நம்பினாராம்.. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவும் உதவியும் கிடைக்காமல் பாஜக மேலிடம் தொடர்ந்து மவுனம் காத்து வருவது, அவருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலா
மற்றொரு பக்கம், அதிகாரத்தை மீறி தன்னால் எதையும் செய்ய முடியாது என்று ஆளுநர் மாளிகையும் கைவிரித்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒருபக்கம் சசிகலா விஸ்வரூபம், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் பேட்டிகள் என 2 அதிரடிகள் தமிழக அரசியல் களத்தில் ஆரம்பமாகி உள்ளன.. இதில், ஓபிஎஸை வைத்து சசிகலா அரசியல் செய்ய போகிறாரா? அல்லது சசிகலாவை பயன்படுத்திக் கொண்டு ஓபிஎஸ் மேலே வர பார்க்கிறாரா என்பதுதான் அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

விசுவாசம்
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் சொன்னதாவது, "ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் இருந்தே பாஜக விசுவாசிதான்.. பாஜகவுக்கு சாதகமாகவே அவரது 5 வருட அரசியல் இருந்து வருகிறது.. பாஜக மேலிடத்தை எந்தவகையிலும் பகைத்து கொள்ளாமல், அவர்களுக்கு இணக்கமான, பிடித்தமான வகையிலேயே அரசியல் செய்து வருபவர்... ஆனால், இப்போது திடீரென எடப்பாடியை அட்டாக் செய்து பேட்டி தருகிறார் என்றால், பாஜக மேலிடத்தின் சப்போர்ட் இல்லாமல் அப்படி செய்ய முடியாது.

சிக்னல்
ஓபிஎஸ் அரசியல் அணுகுமுறையில் தெரியும் மாற்றத்துக்கு முக்கிய காரணமே, டெல்லியாக இருக்கக்கூடும்.. அதேபோல சசிகலாவின் அரசியல் வேகம் எடுப்பதற்கும் டெல்லி தந்த சிக்னல்தான் காரணமாக இருக்கும்.. அரசியலில் இருந்து அன்று சசிகலா திடீரென ஒதுங்கி கொள்வதாக அறிவிக்கப்பட்டதற்கு காரணமே பாஜகதான் என்று முணுமுணுக்கப்பட்ட நிலையில், இப்போது அதிமுக கொடியுடன் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளதன் பின்னணியிலும் பாஜகவின் பிளான் இருக்கும் என்றே தெரிகிறது.

எச்சரிக்கை
ஒருவேளை பாஜக மேலிடம் எச்சரித்திருந்தால், சசிகலாவோ, ஓபிஎஸ்ஸோ நிச்சயம் இப்படியெல்லாம் பேட்டி தந்திருக்க மாட்டார்கள்.. ஆனாலும் இது திட்டமிடப்பட்ட ஒன்றா? சசிகலா, ஓபிஎஸ்ஸின் தற்கால நிகழ்வுகள் எல்லாம் யதேச்சையாக நடந்து வரக்கூடிய ஒன்றா? என்று தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி விஷயத்தில் பாஜக சற்று ஒதுங்கி உள்ளதாக யூகிக்க முடிகிறது.. இதற்கு 2 விதமான காரணங்கள் இருக்கலாம்.

முக்கியத்துவம்
முதலாவதாக, "ஒன்மேன் ஆர்மி"யாக அதிமுக உள்ளதை பாஜக மேலிடம் ஆரம்பத்தில் இருந்தே ரசிக்கவில்லை.. அதிமுக Vs திமுக என்ற காலம் காலமாக உள்ள பார்முலாவை உடைத்து, பாஜக Vs திமுக என்ற களத்தை ஏற்படுத்தவே முனைப்பு காட்ட துடிக்கிறது.. ஒருவகையில் எடப்பாடிக்கான முக்கியத்துவத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம். மற்றொன்று, கொங்குவில் எடப்பாடியின் செல்வாக்கை சரிய செய்யும் முயற்சியாகவும் இருக்கலாம்.

தேர்தல்
மேலும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது..அதற்காகவே, மாநில தலைவராக அண்ணாமலையையும், மத்திய அமைச்சராக முருகனையும் சமீபத்தில் பொறுப்பில் நியமித்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும், சீட் விவகாரம் முதல் வேட்பாளர் தேர்வு வரை கூட்டணிக்குள் பிரச்சனையும் வெடித்தும் வருவதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே பாஜக இந்த வியூகத்தை கையில் எடுத்திருக்கலாம்.

கொங்கு
சுருக்கமாக சொன்னால், கொங்குவில் எடப்பாடியின் செல்வாக்கை வீழ்த்தினால், அது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கணக்கு போடப்படுகிறது.. எனவேதான், எடப்பாடி பழனிசாமிக்கு உதவாமல், ஓபிஎஸ், சசிகலா நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல், "மவுனம்" காத்து காத்து வருகிறது போலும்.. ஆனால், இந்த மவுனம் எதற்கு சம்மதமோ?!!" என்றுதான் தெரியவில்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications