சாத்தான்குளம் போலீசுக்கு எதிராக.. துணிச்சலாக பெண் போலீசே அளித்த சாட்சியம்! வழக்கில் திருப்பம் இங்கேதான்
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு, சாட்சியங்கள் மிக துல்லியமாக இருந்ததுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாட்சியங்களை இங்கே காணலாம்.
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரிதிலும் அரிதான வழக்காக கருதிய மதுரை நீதிமன்றம், இந்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, சாமதுரை என 9 போலீசாருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய சாட்சியங்கள்
முதல் முறையாக 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. காவல் நிலைய மரணங்கள் இனி நிகழக்கூடாது என போலீசாரை எச்சரிக்கும் வகையில் இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டதாகவும் நீதிபதி கூறியிருந்தார். இந்த வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு, சாட்சியங்கள் மிக துல்லியமாக இருந்ததுதான் காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இவ்வழக்கில் கடுமையாக பலமணி நேரம் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி மற்றும் பியூலா ஆகியோர் சாட்சியம் அளித்தனர். முக்கிய சாட்சியான ரேவதி தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார். நீதி விசாரணையின் போது நீதிபதியிடமும், சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் சம்பவம் குறித்து தெரிவித்தார். இவ்வாறு இந்த வழக்கில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாட்சியங்களை இங்கே காணலாம்.
ஆடைகள், ரத்தக் கறைகள்
இந்த சம்பவத்திற்கு ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுவது, கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி ஜெயராஜ், தனது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாகவும், அங்கு ரோந்து சென்ற சாத்தான்குளம் போலீசார் அதை கண்டித்ததாகவும், இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான்.. வாக்குவாதம் நடந்ததை அப்பகுதி மக்களும் பார்த்து இருக்கின்றனர். மேலும் அப்போது கடையில் இருந்த ஜெயராஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதையும், போலீஸ் நிலையத்தில் இருப்பதையும் அப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். இது ஒரு சாட்சியமாக அமைந்தது.
இது மட்டுமின்றி தனது தந்தையை வீட்டுக்கு அனுப்பும்படி அவரது மகன் பெனிக்ஸ் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் கூறி இருக்கிறார். ஆனால், அவரையும் போலீசார் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். கைகளை கட்டி, ஆசனவாயில் லத்தியை நுழைத்து கடுமையாக தாக்கியதும், இதனால் அவர்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதும் தெரியவந்திருக்கிறது. அதாவது அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும், அவர்கள் தாக்கப்பட்ட இடங்களில் ரத்தக்கறைகளும், தடயங்களும் போன்றவை இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்களாக அமைந்தது.
பெண் போலீஸ் ரேவதி
இந்த தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் இருவரும் அடைக்கப்பட்டனர். அங்கு இவர்களது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர். இதற்கான சாட்சியங்களாக உயிரிழக்கும்போது அவர்களை நேரில் பார்த்தவர்கள், பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், கோவில்பட்டி சிறை அதிகாரிகள் ஆகியோரது சாட்சியங்கள் அமைந்தன.
முக்கியமான சாட்சியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதருடன் பணிபுரிந்த பெண் போலீஸ் ரேவதி சாட்சி அளித்ததும் இந்த வழக்கில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பொதுவாக போலீசார் குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக மற்ற போலீசார் சாட்சி சொல்வது எளிதல்ல என சொல்வதுண்டு. அப்படி இருக்கையில், பலமணி நேரமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி மற்றும் பியூலா ஆகியோர் சாட்சியம் அளித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.












Click it and Unblock the Notifications