எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? அக்டோபர் 1 முதல் மாறும் ரூல்ஸ்.. இந்த விஷயம் முக்கியம்
சென்னை: எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு விதிகள் மாறப்போகிறது.. அக்டோபர் 1 முதல் வங்கிக் கணக்கிலிருந்து அடிக்கடி பணம் எடுப்பவர்கள் இந்த விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால், இதுவரை கட்டணம் இல்லாமல் செய்து வந்த ஒரு பணிக்கு இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரலாம். அது என்ன தெரியுமா?
நாளை மறுநாள், அக்டோபர் 1 முதல் சில எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் இதுவரை இருந்த நடைமுறையில் மாற்றம் வரப்போகிறது. இந்த மாற்றம் வந்தாலும், எல்லா எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கும் ஒரே விதி கிடையாது.

எஸ்பிஐ அக்கவுண்ட்
எந்த வகையான கணக்கு வைத்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியம். குறிப்பாக, அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் 4 முறை வரை பணம் எடுக்கலாம். இந்த 4 முறைக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அடுத்தடுத்து எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு ஜிஎஸ்டியும் சேரும்.
அதனால், மாதத்தில் அடிக்கடி பணம் எடுக்கும் பழக்கம் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான்கு முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்பதால், அதற்கு மேல் எப்போது பணம் எடுத்தாலும் கட்டணம் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சிறப்பு கணக்கு வைத்திருப்போர்
சம்பளம் பெறுவதற்காக எஸ்பிஐயில் சிறப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு மாற்றம் இருக்கிறது. மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, இதுவரை ஒரு மாதத்தில் 10 முறை வரை கட்டணம் இல்லாமல் பயன்படுத்த முடிந்தது... இனிமேல் அந்த எண்ணிக்கை 5 முறையாக குறைகிறது.
இந்த 5 முறையில் பணம் எடுப்பது மட்டுமல்ல, கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்பது போன்ற ஏடிஎம் சேவைகளும் சேரும். 5 முறைக்கு மேல் மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால், பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். கணக்கு இருப்பை பார்ப்பது போன்ற சேவைகளுக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.11 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கும் ஜிஎஸ்டி சேரும்.
ஆனால், எஸ்பிஐயின் சொந்த ஏடிஎம்களை பயன்படுத்துவதில் இந்த மாற்றம் கிடையாது... மற்ற வகையான எஸ்பிஐ கணக்குகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.. அதனால் அக்டோபர் 1 முதல் கட்டணம் வரப்போகிறது என்று எல்லா எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் பயப்பட வேண்டியதில்லை. நாம் வைத்திருக்கும் கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டாலே போதும்.
வைப்பு நிதி - ஓய்வூதியம்
அதேபோல பெரிய தொகை வைப்பு நிதி குறித்த சந்தேகம் வரலாம்.. பொதுவாக, வங்கியில் ரூ.3 கோடி அல்லது அதற்கு மேல் பெரிய தொகையை வைப்பு நிதியாக போடுபவர்களுக்குத்தான் இந்த புதிய விதி பொருந்தும். சில வங்கிகளில் இந்தத் தொகை மாறுபடலாம். ஆனால், பொதுமக்கள் வழக்கமாக போடும் சிறிய தொகைக்கான வைப்பு நிதி வட்டியில் இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.
அதேபோல, ஓய்வூதியத்துக்காக பணம் சேமிக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் புதிதாக சேருபவர்களுக்கும் அக்டோபர் 1 முதல் கட்டணம் வருகிறது.
சேவை மையம் மூலம் இந்தத் திட்டத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு கணக்கு எண் வழங்கப்படும். அந்தக் கணக்கை தொடங்குவதற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் அக்டோபர் 1 முதல் வங்கி கணக்கு, ஏடிஎம், வைப்பு நிதி, செல்போன் பணப்பரிவர்த்தனை, கேஸ் சிலிண்டர் மானியம், ஓய்வூதிய சேமிப்பு என பல விஷயங்களில் மாற்றங்கள் வருவதால், நமக்கு பொருந்தக்கூடிய மாற்றங்களை மட்டும் தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது...!!!


Click it and Unblock the Notifications
