எஸ்பிஐ வங்கியில் ரூ.2.81 கோடி கடன்.. தொழிற்சாலையை ஆய்வு செய்ய போன அதிகாரிகள்.. அங்கே கண்ட காட்சி
சென்னை: வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் கடன் வாங்குவது, தவணை செலுத்தாமல் இருப்பதும் வழக்கமானதுதான்.. ஆனால், அகமதாபாத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அதையெல்லாம் தாண்டிய ஒரு சினிமா பாணி திருட்டு என்றே சொல்லலாம்.. எஸ்பிஐ வங்கியின் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு, ஒரு தொழிலதிபர் நடத்திய மாஸ்டர் பிளான் தெரியுமா? அவர் எப்படி சிக்கினார் தெரியுமா?
அகமதாபாத்தைச சேர்ந்த பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் "ஹைடா பயோ சயின்ஸ் இண்டஸ்ட்ரீஸ்" (Hyta Bio Science Industries).. இந்த கம்பெனியின் உரிமையாளர் பங்கஜ் காந்திலால் பிரஜாபதி..

இவர் அகமதாபாத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் சிறு தொழில் பிரிவில், தனது நிறுவனத்தின் வணிகத் தேவைக்காக அக்டோபர் 2020-ல் ரூ.80 லட்சம் ரொக்க கடன் மற்றும் ரூ.2 கோடி காலக்கடன் என மொத்தம் ரூ.2.81 கோடி கடன் பெற்றுள்ளார்.
இந்த கடனுக்கு வங்கியின் விதிகளின்படி, தொழிற்சாலையில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் சொத்துகள் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் கடனுக்கான தவணைகளை முறையாக செலுத்தியிருக்கிறார்.. இதன்மூலம் வங்கியின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.. ஆனால் அதற்கு பிறகு தவணையை கொடுக்க மனம் வரவில்லை.
தவணை தொகை வராததால், சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள், கடந்த மே 2022-ல் அந்தத் தொழிற்சாலைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்த முயன்றனர்.. தொழிற்சாலையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அதிகாரிகளுக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது..
தொழிற்சாலையில் ஒரு இயந்திரம்கூட காணோமாம்.. தூசியும் காலி சுவர்களும்தான் மிச்சமிருந்தன. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதற்குள், தொழிற்சாலைக்குச் சொந்தமான அத்தனை உற்பத்தி இயந்திரங்களையும் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி வெளியேற்றி விற்றுத் தீர்த்துள்ளார் அந்தத் தொழிலதிபர். அடமான பொருள்களையே காணாமல் போக செய்துவிட்டு, அந்தத் தொழிலதிபர் அதோடு எஸ்கேப் ஆகிவிட்டார்.
நிலுவையில் உள்ள ரூ.80.09 லட்சம் ரொக்கக் கடன், ரூ.1.72 கோடி காலக்கடன் மற்றும் வட்டித் தொகை ரூ.29.12 லட்சம் என மொத்தம் ரூ.2.81 கோடியை மொத்தமாக ஏப்பம் விட்டுள்ளார் தொழிலதிபர்.. இந்த விவகாரம் தொடர்பாக வங்கி நிர்வாகம் உடனடியாக சிஐடி குற்றப்பிரிவு காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள பங்கஜ் காந்திலால் பிரஜாபதியை பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இதனிடையே, வங்கி தரப்பில் அடமான சொத்துகளில் சில ஏலம் விடப்பட்டு ரூ.62.9 லட்சம் மீட்கப்பட்டுள்ள போதிலும், வங்கியின் கோடிக்கணக்கான பணத்தோடு அடமான இயந்திரங்களையே விற்பனை செய்துவிட்டு தப்பியோடிய இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
