மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.. கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது.. நடிகர் விஜய்
சென்னை: வரும் 17 ம் தேதி 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி உதவி தொகை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது என்று விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வர இருப்பதாக பல ஆண்டுகளாகவே அவ்வப்போது பேச்சுக்கள் எழுவதுண்டு. ஆனால், சமீப காலமாக விஜயின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் பலமாக அடிபட தொடங்கியிருக்கின்றன. இதற்கு அவரது விஜயின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது போக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதுமட்டும் இன்றி தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் விஜய் தரப்பில் கேட்டு பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், வரும் 17 ம் தேதி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி உதவி தொகை வழங்க உள்ளதாக அவரது மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. 6 ஆயிரம் அறுசுவை உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் கட் அவுட் வைக்கக் கூடாது என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கட் அவுட் வைக்கக் கூடாது என்று நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதால் நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications