ரத்தம் சொட்ட அடித்த போலீஸ்.. திமுக கூட்டணிக்கே இந்நிலையா? மமக போராட்ட தடியடி பற்றி எஸ்டிபிஐ கேள்வி
சென்னை: தாம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மமகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு எஸ்டிபிஐ மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தெரிவித்து இருப்பதாவது, "தாம்பரத்தில் அமைந்துள்ள, மெட்ராஸ் கிருத்துவ சமுதாய கல்லூரியை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சீல் வைத்தும், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் எம்.யாக்கூப் அவர்களை ஒருமையில் பேசிய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி பிரயோகம் நடத்தி கைது செய்யப்பட்டு உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தாக்குதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மமக நிர்வாகிகளுக்கே இந்த நிலைமை என்பது வருத்தத்திற்குரியது. உடனடியாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். தடியடி நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை கிருத்துவ சமுதாய கல்லூரியை முன்னறிவிப்பின்றி சீல் வைத்த மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தாம்பரம் மாநகராட்சி ஆணையரை கண்டித்து ம.ம.க சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் அத்துமீறலை வெல்ஃபேர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, ம.ம.க மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்களை அதிகாரத் திமிருடன் ஒருமையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை ஓர் அரசு அதிகாரி இவ்வாறு மரியாதைக் குறைவாக நடத்துவதை தமிழ்நாடு அரசு கண்டும் காணாமல் இருப்பதன் பொருள் இஸ்லாமோபோபியா என்றே எண்ண தோன்றுகிறது. தாம்பரம் மாநகராட்சி ஆணையரை கண்டித்து மமக சார்பாக ஜனநாயக முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை மேற்கொண்ட தடியடி உள்ளிட்ட அத்துமீறல்கள் கடும் கண்டனத்துக்குரியது. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மற்றும் காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications