“தேர்தல் நம்பகத்தன்மை கேள்விக்குறி”.. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய SDPI வலியுறுத்தல்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள எஸ்டிபிஐ கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தேர்தலின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக நடைமுறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து SDPI தேசிய தலைவர் எம்.கே. ஃபைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தல்களின் நேர்மை மற்றும் பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதில் கடுமையான தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, SDPI தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) மூலம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து SDPI கட்சி தீவிர கவலை தெரிவித்து கொள்கிறது. மேலும், வாக்குப் பதிவுக்கு முன்பும் பின்னரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வரிசை எண்களில் முரண்பாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக SDPI தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன் மூத்த நிர்வாக மற்றும் காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டதையும் SDPI கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நிறுவனங்களின் நடுநிலைத்தன்மை மற்றும் தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புவதாக கட்சி குறிப்பிடுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் கலவரங்களாக மாறியுள்ள நிலையில், அமைதியை நிலைநிறுத்த மத்திய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தும் பணியில் இருக்கும் என முன்பே உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றின் செயல்திறன் மற்றும் நோக்கங்கள் குறித்து தீவிர கேள்விகள் எழுந்துள்ளதாகவும் SDPI தெரிவித்தது.
அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் மத அடிப்படையிலான பிரிவினை மற்றும் அடையாள அரசியலை ஊக்குவித்ததாகவும், இதனால் சமூகப் பிளவுகள் தீவிரமடைந்ததுடன் ஆட்சி, மக்கள் நலன் மற்றும் அனைவர் இணைந்த வளர்ச்சி போன்ற முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கட்சி குற்றம்சாட்டுகிறது
.
தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையையும் இந்த அறிக்கை எடுத்துரைத்துள்ளது. 108 இடங்களை வென்று மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு (TVK) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க மறுத்தது அரசியல் நோக்கமுடைய அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவும், இது ஜனநாயக மரபுகளை பாதிப்பதாகவும் SDPI தெரிவித்துள்ளது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியலமைப்பு பதவியை பயன்படுத்தி ஜனநாயக செயல்முறையை பாதிக்கும் முயற்சியாகும் என்றும் கட்சி கூறியுள்ளது.
பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்திய SDPI, மேற்கு வங்கத் தேர்தல் செயல்முறையைச் சுற்றியுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், EVM வரிசை எண் முரண்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள், நிர்வாக அதிகாரிகள் மாற்றம், மற்றும் தேர்தலின்போது மற்றும் அதற்குப் பிறகு மத்திய அமைப்புகளின் பங்கு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் காலக்கெடுவுடன் கூடிய நியாயமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
மக்களின் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் இந்தியக் குடியரசின் அடித்தளமாகத் தொடரவும் உடனடி திருத்த நடவடிக்கைகள் அவசியம் என SDPI வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications