தமிழக ஆளுநர் குறித்து சந்தேகம் கிளப்பும் அரசியல் கட்சிகள்... ரவியை திரும்பப்பெற SDPI வலியுறுத்தல்..!
சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டது குறித்து சந்தேகம் கிளப்பிய நிலையில், இப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியும் சந்தேகம் எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஏற்கமாட்டோம்
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தமிழகத்தின் உரிமைகளை மதிக்கக் கூடியவராக இருக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் உரிமைகளை மதிக்கக்கூடிய, ஜனநாயக சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்களுள் ஒருவரை ஆளுநராக நியமிக்காமல், நாகாலாந்து அரசாங்கத்தின் பல்வேறு விவகாரங்களில் தலையிட்டு, தனது ஜனநாயக பூர்வமற்ற செயல்பாடுகளால் நாகாலாந்து மாநில மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வெறுப்புக்கு ஆளான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி அவர்களை தமிழக ஆளுநராக நியமித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

சந்தேகம்
ஏற்கனவே, அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி அவர்களால் அந்த மாநில அரசும், மாநில மக்களும் பல்வேறு முட்டுக்கட்டைகளை சந்தித்தனர். இந்த சூழலில் தமிழக ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி அவர்களை நியமித்திருப்பதன் பின்னணியில், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் மறைமுக திட்டம் ஏதுமிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆதிக்கம்
ஒரு மாநில ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால் மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல், தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் நடவடிக்கைகள் அதனை அப்பட்டமாக மீறுவதாக உள்ளன. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்.

கவலையில்லை
தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு, அவரின் தன்னிச்சையான நியமனங்கள் போன்றவை தமிழகத்தில் நிலவிய இரட்டை நிர்வாகத்தை வெளிப்படையாக காட்டின. கூட்டாட்சி தேசத்தில் இதுபோன்ற இரட்டை அதிகார பீடங்கள் மாநிலத்தின் சுயாட்சியை பாதிக்கும். ஆனால், மாநில சுயாட்சி பாதிப்பு குறித்து சிந்திக்காத பாஜக இதுகுறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

நாகாலாந்து
நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டிருப்பது நாகாலாந்தில் பலருக்கு நிம்மதியை தந்துள்ளது என நாகாலாந்தின் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசிற்கு தலைமை தாங்கும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்.டி.பி.பி) தெரிவித்துள்ளது என்றால், அவரின் ஜனநாயக பூர்வமற்ற செயல்பாடு அங்கு எந்த அளவிற்கு அமைந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

திரும்பப்பெறுக
ஆகவே, தனது ஜனநாயகபூர்வமற்ற செயல்பாடுகளால் நாகாலாந்து மக்களாலும், அங்குள்ள அரசியல் கட்சிகளாலும் வெறுக்கப்பட்ட அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, தமிழகத்தின் ஆளுநராக நியமித்திருப்பதை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications