அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்.. எஸ்டிபிஐ அறிவிப்பு! பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிரடி முடிவு
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என எஸ்டிபிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அண்மையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. சென்னை வந்த அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்திருந்த நிலையில் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ விலகல்
இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. பாஜக உடனான கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தி உள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 1 இடத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது எஸ்டிபிஐ.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், "தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது முழக்கம் எங்கே போனது? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
பாஜகவுடன் சேர்ந்தால் அழிவு
பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்கும் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை தமக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தமக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை.
தனிமைப்படுத்த வேண்டும்
பாஜகவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள். எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னலாவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தங்களை விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications