VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அக்கட்சி இரட்டை இலக்கத்திலான தொகுதிகளையும் தேமுதிகவுக்கு கொடுத்ததை போல் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட்டையும் வழங்குமாறு கேட்டு வருகிறது. அதாவது 10+1 என்ற அடிப்படையில் சீட் கேட்பதால்தான் இரு முறை பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதுவரை தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் - 28 தொகுதிகள்,
கம்யூனிஸ்ட்- 4 தொகுதிகள், மதிமுக - 4 தொகுதிகள்
மமக- 2 தொகுதிகள், ஐயூஎம்எல்- 2 தொகுதிகள், கொமதேக- 2 தொகுதிகள் ஆகிய கட்சிகளுக்கு 42 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது. அது போல் மக்கள் நீதி மய்யமும் கூடுதல் தொகுதி+ சொந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எடுத்துக் கொண்டால் அக்கட்சி தற்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கிறது. அதாவது 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது.
ஆனால் திமுகவோ 6 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. திருமாவளவன் அந்த எண்ணிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக இடம் பிடித்து பயணித்து வருகிறது.
திமுகவுடனான நட்புறவு, பாஜகவுடனான கொள்கை எதிர்ப்பு என்ற ஒற்றை மந்திரத்தை கொண்டு விசிக பயணித்து வருகிறது. திமுக கூட்டணியில் மிக முக்கிய பங்களிப்பை கொடுக்கும் கட்சியாக விசிக உள்ளது. அக்கட்சிக்கு இரு எம்பிக்கள் உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற கட்சி!
திருமாவளவன் எந்த நேரத்திலும் கொள்கை பிடிப்பில் உறுதியாக இருப்பவர். கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் முரணான விஷயங்களுக்கு தனது எதிர்ப்பை காட்டுவார். இதற்கு கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 50 -க்கும் மேற்பட்டோர் இறந்த போது கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த தைரியம் திருமாவளவனுக்கு உண்டு.
அது போல் ஆவண படுகொலை, பட்டியலினத்தோருக்கு எதிரான கொடுமைகள் என எது நடந்தாலும் அந்த விஷயத்தை கையில் எடுப்பார். எல்லாவற்றுக்கும் மேல் அவரது கட்சியின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் விசிக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
அப்படியிருக்கும் போது அக்கட்சியின் கூடுதல் தொகுதி எதிர்பார்ப்பு என்பது நியாயமான ஒன்று! கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏ, எம்பி இல்லாத தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் வரை கொடுப்பார்கள் என்ற நிலையில் வாக்கு வங்கி இருக்கும் விசிகவுக்கும் கொடுத்தால் எப்படி ஏற்பார்கள்.
எனவே 10 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் இருந்து திருமாவளவன் இறங்கி வரமாட்டார். ஆனால் 6 என்பதை 8 ஆக்கி தர ஸ்டாலின் இறங்கி வருவார். அதுதான் இந்த கட்சிக்கு கொடுக்கக் கூடிய மரியாதையும் கூட! இவ்வாறு அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே விசிகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications