அடுத்த கட்டத்திற்கு போன சீமான்.. கர்ப்பப்பையை வெட்டி எறிய பெரியார் சொன்னார்.. ஏன் செய்யலைன்னு கேள்வி
சென்னை: தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக சீமான் வீட்டை, மே 17 உள்ளிட்ட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இப்படி இருக்கையில் கருப்பை குறித்து பெரியார் கூறிய கருத்துக்களை மேற்கோள்ளிட்டு மீண்டும் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளதாக சலசலப்பு எழுந்திருக்கிறது.
பெரியார் குறித்து சீமான் பேசிய விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. அவரது பேச்சுக்கு எதிராக மே 17 உட்பட 30க்கும் மேற்பட்ட தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தன. அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடந்திருக்கிறது.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மீண்டும் பெரியார் குறித்து விமர்சித்திருக்கிறார். அதாவது, "நானும் பிரபாகரனும் இருக்கும் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் முதல் முதலில் வெளியான போதே இது எடிட் செய்யப்பட்டது என்று கூறியிருக்கலாமே. 15 ஆண்டுகளாக எங்கு படுத்து இருந்தீர்கள். பெரியாரைத் தாக்கி பேசும் போது உடனடியாக பதிலுக்கு பிரபாகரனை தாக்கி பேச தொடங்கி இருக்கிறீர்கள்.
கொளத்தூர் மணி என்பவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் நான் சோவையும், குருமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு போய் சி.பா.ஆதித்தனாரின் காலில் விழுந்து நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தேன் என்று பொய்யாக கூறுகிறீர்களே நியாயமா? நாம் தமிழர் கட்சி என் தாத்தனுடையது. தமிழ் தந்தையினுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் உரிமை இருக்கிறது. அந்தக் கட்சிக்கு நாம் தமிழன் என்று பெயர் வைப்பதற்கு நான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?
சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சியுடன் சம்பந்தம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவீர்கள்? நான் உங்களை எதிர்த்து பேசமாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில் தானே இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
பெரியார் உங்களுக்கு தேவை எனில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். அடிப்படையிலே பெரியார் பிழையானவர். தமிழ், தமிழர், தமிழர் அரசு இன்று பேசுவது பித்தலாட்டம் என்றும், திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம் என்றும், அவ்வாறு பேசுவது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.
தமிழ் முட்டாள்களின் பாசை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படிக்க வைத்ததா? என்றெல்லாம் பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். என் நிலத்தில் அப்படி பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் கன்னடர்.
நீங்கள் என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் மொழி என்று கூறுகிறீர்கள். என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி?
பெண்ணிய உரிமைக்காக பேசிய பெரியார், தாலியை அறுத்து எறிய சொன்னார். திராவிடர் கழகம் அதை செய்தது. அதே பெரியார், கருப்பையை அறுத்து எறிய சொல்லியிருந்தார். பெண்கள் என்ன பிள்ளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பெரியாரியம் பேசும் பெருமக்கள் குறிப்பாக, அக்கா அருள்மொழியோ, அம்மையார் கனிமொழியோ, மதிப்பிற்குரிய அம்மையார் சுந்தரவல்லியோ கருப்பையை அறுத்து எறியவில்லையே? குழந்தை பெற்றிருக்கிறீர்களே! இதுதான் பெரியாரை பின்பற்றும் லட்சமணமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications