இடைத் தேர்தல்.. மாநாட்டில் மாஸ் காட்ட போகும் அண்ணன் சீமான்! செலவுக்காக திரள்நிதி திரட்டவும் திட்டம்!
சென்னை: திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் வேலைகளை துவக்கி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். 132 பேர் கொண்ட அம்பாசமுத்திரம் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 26ஆம் தேதி பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக திரள்நிதி தட்டவும் தயாராகி வருகிறாராம் அண்ணன்.
அடுத்து ஒரு தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராகி வருகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக கட்சி கழகம் தனி பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது.

திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பிறகு சில எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ததால் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. இம்மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் சீமான்.
அந்தத் தொகுதியில் நாடார் வாக்குகளும், முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். சீமான் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது மனைவி கயல்விழி முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு சமூக வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார் என்கின்றனர். தமிழக வெற்றிக்கழக தரப்பில் இசக்கி சுப்பையாவை மீண்டும் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.
அதிமுகவும் திமுகவும் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்ட நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்களும் அறிவிக்கப்படலாம் என்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் வேலைகளை தற்போது தொடங்கி விட்டார் சீமான் என்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். அதாவது தேர்தல் நடக்கும் அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 27ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.
ஏற்கனவே அந்த தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கும், இந்த பொதுக்கூட்டப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த 132 பேர் கொண்ட அம்பாசமுத்திரம் ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து சீமான் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நெல்லை பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் எழுச்சி நாள் விழாவும் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அந்த தொகுதியை சுற்றிய சீமானின் திட்டங்கள் இருக்கும் என்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். அதுமட்டுமல்லாமல் பொதுக் கூட்டத்திற்காகவும் தேர்தல் செலவுகளை சமாளிக்கவும் திரள்நிதி கேட்டு விரைவில் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாகவும் சொல்லுகின்றனர்.




Click it and Unblock the Notifications
