ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்களே! எல்லாப் பக்கமும் அடி.. விஜய்க்கு எகிறும் பிரஷர்! சீனுக்குள் வந்த சீமான்!
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் கணக்கீட்டுப் பணிகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களை தனியாருக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த பட்டியலில் சேர்ந்து இருக்கிறார் சீமான். அனுபவமற்ற பணியாளர்களை ஈடுபடுத்தினால் மின்கணக்கீட்டில் மேலும் குளறுபடி அதிகரிக்காதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக அரசின் வாரியங்களின் மிக முக்கியமானது தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி, மின் கொள்முதல், பயனாளிகளுக்கு சப்ளை என TANGEDCO மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மின் கணக்கீட்டில் குளறுபடி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் கணக்கீட்டு பணிகளில் குளறுபடிகள் ஏற்ப்படுவதாகவும், இதனை சரி செய்யும் வகையில் மின் கணக்கிட்டு பணியில் ஒப்பந்த தொழிலாளர்களின் நியமிக்க டெண்டர் வெளியிடப் போவதாக தகவல் வெளியானது.
மின் கணக்கீடு
மின் உற்பத்தி, மின்விநியோகம், மின் கடத்தல், மின் நுகர்வு கணக்கீடு என அனைத்திலும் தமிழக வெற்றி கழக அரசு தனியார் மையத்தை நோக்கி பயணிப்பதாகவும், இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். குறிப்பாக அனுபவமற்ற நிறுவன பணியாளர்களை மின் கணக்கீட்டில் ஈடுபடுத்தினால் குளறுபடி மேலும் அதிகரிக்காதா? என கேள்வி எழுப்பிருக்கிறார்.
சீமான் அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகப் பணியிடங்களை நிரப்பாமல், பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க தவெக அரசு முடிவெடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின்சாரம் என்பது வெறும் வணிகப்பொருள் மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடியாகப் பிணைந்துள்ள அடிப்படைத் தேவையாகும். அதன் பயன்பாட்டைக் கணக்கிடும் மிக முக்கிய பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயமாகும்?
தனியார்மயம்
மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அந்த காலிப்பணியிடங்களை இத்தனை மாதங்களாக ஏன் அரசு நிரப்பவில்லை? மின்துறையில் போதிய பணியாளர்களை நியமிக்காதது யாருடைய தவறு? அரசின் நிர்வாகத் தவறுக்கு, அரசுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி தீர்வாகும்? அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கையில், அவர்களுக்கு நிரந்தரப் பணியை வழங்காமல், இருக்கின்ற பணிகளையே ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் தவெக அரசின் வேலைவாய்ப்புக் கொள்கையா? இதுதான் மக்களுக்கான மாற்றமா?
மின்வாரிய பணியாளர்கள்
தவெக ஆட்சியில் அனுபவமிக்க மின்வாரிய பணியாளர்கள் எடுத்த கணக்கீடுகளிலேயே இலட்சக்கணக்கான வீடுகளில் குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும்போது, தவறான கணக்கீடு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
மின் கணக்கீடு தாமதமாகி அதனால் மக்களுக்கு மேலும் அதிக கட்டணம் செலுத்த நேரிடாதா? அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் யாரிடம் முறையிட வேண்டும்? தனியார் நிறுவனத்திடமா? தவெக அரசிடமா?
தனியார் நிறுவனம்
ஒப்பந்த நிறுவனம் தவறு செய்தால் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் நுகர்வு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! பணியாளர்கள் பற்றாக்குறை என்றால், அதற்கான தீர்வு பணியாளர்களை நியமிப்பதுதானே தவிர தனியார்மயம் அல்ல என்பதை அரசு எப்போது உணரப்போகிறது? இன்றைக்கு மின் கணக்கீட்டுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மக்களின் வரிப்பணம்
நாளை மின்வாரியமே தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? வானூர்தி நிலையம் முதல் மின்வாரியப் பணிகள் வரை எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசு எதை நிர்வாகம் செய்யப்போகிறது? வாடகைக்கு விடும் வேலையையா? இதற்கு எதற்கு ஆட்சி? அரசு? அமைச்சரவை? முதலமைச்சர்? அவற்றையும் தனியாரிடம் கொடுத்தால் வீண்செலவு குறையுமே! பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சமாகுமே!
மின் இணைப்பு
தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன. கோடிக்கணக்கான மக்களுடன் நேரடித் தொடர்புடைய பணியை மேற்கொள்ள போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, தற்காலிக ஒப்பந்த முறையைத் தேர்வு செய்வது மிகமோசமான நிர்வாக நடவடிக்கையாகும்.
மின் கணக்கீட்டாளர்
எனவே, மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட மின்வாரியத்தின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
