அரசியல் கலக்காத விருதுகள்... சீமான் நடித்த படத்திற்கும் கிடைத்த தமிழக அரசின் விருது
சென்னை: தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
பொதுவாக, மாநில அரசுகள் கொடுக்கும் இதுபோன்ற விருதுகளில் அரசியல் கலப்பு இருப்பது வழக்கம். ஆனால், தற்போது திமுகவுக்கு எதிரணியில் இருக்கும் சீமான் நடித்திருக்கும் திரைப்படத்திற்கும், தமிழ்நாடு அரசு விருது வழங்குவதால் இது அரசியல் கலப்பில்லாத விருது என்ற கோணத்தில் கலைஞர்கள் இதை பார்க்கின்றனர்.

கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த திரைப்படங்கள், சின்னத்திரைகள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுபவர்களின் விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டன. பின்னர் பல்வேறு சூழல்களால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தற்போது 2009 - 2014 ஆம் ஆண்டில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா, வரும் 4-ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விருதை வழங்குகிறார்.
இதில் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களில் இரண்டாவது பரிசை மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. இயக்குநர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தருண் கோபி, மணிவண்ணன், சீமான், பொன்வண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹீரோயிஸத்தை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் இறங்கிய படம் மாயாண்டி குடும்பத்தார். குடும்பப் பாசம், பரம்பரை பகை, உறவுகளுக்கு இடையேயான சிறு உரசல்கள் என தெற்கத்திய மண் வாசனையில் உருவான மாயாண்டி குடும்பத்தார் படம் நகரம் முதல் பட்டித்தொட்டி வரை மக்களின் வரவேற்பை பெற்றது.
சீமான், தருண்கோபி, உட்பட
ஐந்து இயக்குனர்கள் ஒரே படத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்து அசத்தி இருந்தனர்.
மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications