Seeman: விஜய்க்கு கூட்டம் கூடிட்டாலும்! நயன்தாராவுக்கு கூடதான் கூடும்! சீமான் கலகலப்பு பேச்சு
சென்னை: நடிகர் அஜித்தை இறக்கினால் இதை விட இன்னும் கூட்டம் வரும் என தவெக தலைவர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேற்று விஜய் நடத்திய பிரச்சாரத்திற்கு கூடிய கூட்டம் குறித்த கேள்விக்கு சீமான் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். அவர் 98 நாட்களுக்கு இந்த பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறார். சனி, ஞாயிறுகளில் அவர் மக்களை சந்திக்கும் வகையில் இந்த பிரச்சார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ திருச்சி
அதன்படி நேற்று காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து தனக்காக வடிவமைக்கப்பட்ட நவீன பேருந்தில் ஏறி காலை 9.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காந்திமார்க்கெட் பகுதிக்கு புறப்பட்டார்.
பிரச்சார வாகனம்
பிரச்சார வாகனம் கிளம்பியதும் அந்த வாகனத்தின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு விஜய்யை பார்த்து கையசைத்து கொண்டும் ஆரவாரம் செய்தபடியும் வந்தனர். இதனால் பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது. வழிநெடுகிலும் அவரை காண நிறைய பேர் கூடியதால் அவர் மரக்கடைக்கு வருவதற்கே 5 மணி நேரம் ஆகிவிட்டது.
நினைவுப் பரிசு
இந்த நிலையில் வழியில் ஒரு சிலர் விஜய்க்கு நினைவுப் பரிசையும் வழங்கினர். விஜய்யின் பிரச்சார வாகனம் விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய சாலையான டிவிஎஸ் டோல்கேட், தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை வழியாக காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு வந்தது.
நேரம் ஆக ஆக
நேரம் ஆக ஆக ஒரு பகுதி கூட்டத்தினர் வெளியேறினால், இன்னும் சிலர் உள்ளே வருகிறார்கள். இப்படியாக கூட்டம் அப்படியே மெயின்டெய்ன் ஆகி கொண்டிருந்தது. ஒரு வழியாக மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.
கோவை விமான நிலையத்தில்
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறுகையில், இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம்.
சச்சினுக்கு விருது
சச்சினுக்கு விருது தரும் போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமைதான். திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வரும். இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த இயற்கை சீற்றம் நமக்கும் வராது என யாராவது உறுதி அளிக்க முடியுமா?
பக்கத்து வீட்டு கூரை
பக்கத்து வீட்டு கூரைதானே எரிகிறது என படுக்க போனால் உங்கள் சாம்பல்தான் விழுந்திருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல்தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்போது நான் பேசுறது வேடிக்கையாகத்தான் இருக்கும். நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என நினைக்கிறீர்கள்.
பிள்ளைகள்
ஆனால் நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications