ஜோசியர் சொல்றாரு.. விஜய் செய்றாரு.. இதுக்கு அவரையே சிஎம் ஆக்கி இருக்கலாம்.. சீமான் கிண்டல்!
சென்னை: முதல்வர் விஜய் ஜோசியக்காரரின் சொல் கேட்டு நடப்பதாகவும், அதற்கு அந்த ஜோசியக்காரரையே முதல்வராக்கி இருக்கலாம் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். ஜெயிலில் கண்டம் இருக்கிறது என்று கூறியதாலேயே, விஜய் அங்கு சென்று கை நனைத்துவிட்டு வந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே ஜோசியர் ரிக்கி ராதன் பண்டிட் பேச்சிற்கு முதல்வர் விஜய் முன்னிலை அளித்து வருகிறார். முதலில் அவருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்ட போதே எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின் கருப்பு, வெள்ளை உடல் மற்றும் வெள்ளிக் கிழமையானால் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை உடை அணிவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

மறுபக்கம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெற்றி என்ற வார்த்தைக்கு நியூமராலஜி பார்த்தது, சிறைக்கு ஆய்வுக்கு சென்றது, கடலை பார்த்து அலுவலகத்தை மாற்றுவது என்று ஜோசியத்தின் மீது விஜய்க்கு இருக்கும் நம்பிக்கை பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. உடுத்தும் ஆடை முதல் அமரும் அலுவலகம் வரை ஜோசியக்காரரின் அறிவுரையை விஜய் கேட்பதும் விவாதமாகி இருக்கிறது.
இதுதொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தவெக ஆட்சியில் நோ ரீல்ஸ்.. எப்போதும் ரீல்ஸ் தான்.. மெட்ரோ ரயில் ஆய்வு செய்கிறார்.. இன்னொரு பக்கம் சிறையில் ஆய்வு செய்கிறார். அது எதற்கு என்று தான் தெரியவில்லை. எவனோ ஒரு ஜோசியக்காரன் சொல்லி இருக்கிறான்.. ஜெயிலில் உங்களுக்கு கண்டம் இருக்கிறது. அங்கு போய் கை நனைத்துவிட்டு வாருங்கள் என்று..
பைத்தியக்காரன்.. திருஷ்டி அதிகமாக இருக்கிறது.. கருப்பு கோட் போட்டுக் கொள்ளுங்கள்.. திருஷ்டி இருக்கு.. நெற்றியில் கருப்பு பொட்டு வைத்து கொள்ளுங்க என்று.. அதற்கு அந்த ஜோசியக்காரரையே முதல்வராக அமர வைத்திருக்கிலாம்.. உங்கள் ராசிக்கு கடற்கரையை பார்த்த மாதிரி அமர வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே அலுவலகத்தை மாற்றுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு நாதக மட்டுமல்லாமல் மற்ற கட்சியினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் சீமான் செய்தியாளர்களை சந்திப்பை குறைத்து கொண்டுள்ள சூழலில், இடைத்தேர்தலை ஒட்டி மீண்டும் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் நாதகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
