சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரக்குலையே நடுங்குது.. எல்லாமே பிஞ்சுகள்.. சிவசங்கர் பாபா மீது ஏன் நடவடிக்கை இல்லை.. சீமான் பாய்ச்சல்!

சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

"செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. அப்பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.

 நெறிமுறைகள்

நெறிமுறைகள்

பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர்.

 ஒடுக்குமுறை

ஒடுக்குமுறை

'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலைதூக்கவும், மேலெழுந்து உயரவும் உதவும் ஒற்றைப்பேராயுதம் கல்வியே என்பதையுணர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்துமீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.

 செல்வாக்கு

செல்வாக்கு

ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல இச்சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாததத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை. பணபலமும், அரசியல் செல்வாக்கும், அதிகாரப்பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.

 பிஞ்சுகள்

பிஞ்சுகள்

பள்ளி எனும் கல்விக்கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன்மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமுமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது. சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப்பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

 மெத்தனப்போக்கு

மெத்தனப்போக்கு

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும்.

 கவலை

கவலை

பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது. சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது என்பது இதுவரை புரியவில்லை.

 நடவடிக்கை

நடவடிக்கை

ஆகவே, இனிமேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Seeman statement about Sivashankar Baba
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X