சினிமா மாதிரி.. ரிகர்சல் எடுத்துட்டு வந்த நாளை பஞ்ச் டயலாக் பேசுவார் விஜய்.. செல்லூர் ராஜு கிண்டல்!
சென்னை: சினிமா மாதிரி நன்றாக ரிகர்சல் எடுத்துவிட்டு வந்த மனப்பாடமாக நாளை சட்டசபையில் முதல்வர் விஜய் பஞ்ச் டயலாக் பேசுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் செய்துள்ளார். படப்பிடிப்புக்கு வருவதை போல் வந்து விஜய் பஞ்ச் டயலாக் பேசுவார் என்று கூறிய செல்லூர் ராஜு, விலைவாசி உயர்வு தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்றும் சாடியுள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு தவெகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே முதல்வர் விஜய், அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கப்படும். ஆனால் யாரும் சபையில் இருந்து எழுந்து ஓடிவிடக் கூடாது என்று கூறிவிட்டு அவசரமாக ஓடினார்.

அதனை உதயநிதி ஸ்டாலின், யாரும் ஓடக் கூடாது என்று சொல்லிவிட்டு அவரே ஓடிவிட்டாரே.. அதனை டிவி காட்டினீர்களா என்று கூட தெரியவில்லை என்று கிண்டல் செய்தார். இதனால் விஜய் நாளை என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபையில் சண்டை தான் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் நாளை படப்பிடிப்புக்கு வருவதை போல் நன்றாக ரிகர்சல் எடுத்துவிட்டு மனப்பாடமாக வந்து பஞ்ச் டயலாக் பேசுவார். மக்கள் இன்று விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பருப்பு, எண்ணெய், வெங்காயம், அரிசி என அனைத்து விலையும் அதிகரித்துள்ளது.
அதனை பற்றி விஜய் பேச மாட்டார். ஆனால் பஞ்ச் டயலாக் பேச தான் 3 நாட்கள் ரிகர்சல் எடுக்கிறார். ஒரு முதல்வர் உடனுக்கு உடன் பதில் சொல்ல வேண்டும். துறை அமைச்சர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கூட முதல்வர் எழுந்து பதில் அளிக்க வேண்டும். அப்படிதான் தமிழ்நாட்டில் முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்டார்ட் என்று சொன்னால் தான் பேசுவார் போல..
அதேபோல் தவெகவினர் இன்னும் தொண்டர்களாக மாறவில்லை.. அவர்கள் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். அதிமுகவுக்கு எது ஆரோக்கியமோ, அந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். அதுதொடர்பாக இந்த கூட்டத்தில் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. கட்சி வளர்ச்சி தொடர்பாக மட்டுமே பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
