விஜய்யை பார்த்து சிரித்த செல்வப்பெருந்தகை.. செங்கோட்டையன் அதை சொன்னதுமே முகம் மாறிய காங்கிரஸ் தலைவர்
சென்னை: செல்வப்பெருந்தகை டீம் 2 நாட்களுக்கு முன்பு தவெகவுக்கு ஆதரவு தந்திருந்தது.. எனினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் பதவி குறித்த விவகாரம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் கால வாக்குறுதிகளும் தற்போதைய அதிகாரப் போராட்டங்களும் கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன.. சத்தியமூர்த்தி பவனிலும் பரபரப்பான சூழல் நிலவுகிறதாம்.. அதுகுறித்த சில எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகும் சூழலில், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பெரிய அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டு வருகிறது.

தவெக மெஜாரிட்டி
குறிப்பாக தனித்து போட்டியிட்டால் ஆட்சியை அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், தேசிய கட்சியின் ஆதரவு தவெகவுக்கு சட்டப்பேரவையில் பலம் சேர்க்கும் முயற்சியாக கூறப்படுகிறது.. இதன் மூலம் "பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும்" என்ற அரசியல் செய்தியையும் காங்கிரஸ் வெளிப்படுத்த முயல்வதாகவே தெரிகிறது.
அதே நேரத்தில், தவெக தனி சக்தியாக மட்டுமல்லாமல் கூட்டணி அரசியலிலும் செயல்பட தயாராக இருக்கிறது என்ற சிக்னலும் இந்த ஆதரவால் வெளியாகியுள்ளது..
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
இந்த ஆதரவு தொடர்ந்தால் தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் டோட்டலாக மாறியும், குழம்பியும் உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய அணிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் மையம் உருவாகும் வாய்ப்பு குறித்து பேசப்படுகிறது.. சட்டப்பேரவையில் எண்கள் சமநிலைக்கு வந்தால் காங்கிரஸின் ஆதரவு தவெகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் திறக்கலாம்.
திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ள நிலையில், மேலிடத்தின் உத்தரவின்படி, விஜய்யை சந்தித்து முறைப்படி ஆதரவு கடிதத்தையும் தந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் அந்த சந்திப்பில் இருந்தார். த.வெ.க தலைவர் விஜயை பார்த்தவுடனேயே சிரித்த முகத்துடன் வந்து கைக்கொடுத்தார் செல்வப்பெருந்தகை..
செங்கோட்டையன் சொன்ன வார்த்தை
அப்போது, செல்வப்பெருந்தகையை கைக்காட்டிப் பேசிய செங்கோட்டையன், தவெக-காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போனதற்கு இவர்தான் காரணம். இவர் மட்டும் திமுகவுக்கு சப்போர்ட்டாக இல்லாம இருந்திருந்தா தேர்தலுக்கு முன்னாலேயே இந்த கூட்டணி உருவாகியிருக்கும். நாமும் 160 சீட்டுகள் வரை பிடிச்சிருப்போம். எந்த டென்ஷனும் இல்லாம ஆட்சியை அமைச்சிருக்கலாம். கெடுத்தது இவர் தான் என்று செல்வப்பெருந்தகை பற்றி சிரித்துக்கொண்டே கமெண்ட் அடித்தாராம்.
அருகில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும், ஆமாம் ஆமாம்...இப்போது உருவான கூட்டணி அன்னைக்கே நடந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும் என்று வழிமொழிந்துள்ளனர்... இந்த கமெண்ட் செங்கோட்டையன் காதில் விழுந்தாலும், சிரித்தே மழுப்பிவிட்டாராம்.
அடம் பிடிக்கும் செல்வப்பெருந்தகை
இது ஒருபுறமிருக்க, தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று ஓப்பனாக சொல்லியிருந்தார் செல்வப்பெருந்தகை. ஆனால், இப்போது, நான் எதற்கு பதவி விலகணும்? முடியாது. கட்சி மேலிடம் வேண்டுமானால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும். நான் விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்..
இதனையடுத்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக ராகுல்காந்திக்கு புகார் அனுப்பும் வேலையை தொடங்கியிருக்கிறார்களாம் தவெக ஆதரவு சிந்தனையில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள். குறிப்பாக, திமுக வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.க்கள், செல்வப்பெருந்தகையின் ராஜினாமா குறித்து ராகுல்காந்திக்கு நினைவுப்படுத்தி வருகிறார்களாம். ஆசை ஆசையாக தவெகவுக்கு ஓடியும்கூட செல்வப்பெருந்தகைக்கு டென்ஷனும், திக் திக் மனநிலையும் தொடர்ந்தபடியே உள்ளதாம்.
- எழில்












Click it and Unblock the Notifications