"சட்டசபையில் இருப்பவர்கள் கேட்கட்டும்.. பதில் சொல்றோம்”.. சீமான் கேள்விக்கு செங்கோட்டையன் ரிப்ளை!
சென்னை: முதல்வர் விஜய் மீதான சீமான் விமர்சனம் பற்றி அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "சட்டமன்றத்தின் உள்ளே இருப்பவர்வர்கள் கேட்கட்டும்.. பதில் சொல்கிறோம்" எனக் கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக முதல்வர் விஜய் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். செய்தியாள்ர் சந்திப்பின்போது சீமான் கருத்து பற்றிய கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

செங்கோட்டையன் பேசுகையில், "பலர் வெளியில் இருந்து பேசுவதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல இயலாது. வருகிற 5 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அங்கே சட்டமன்றத்தில் யார் யார் பேசுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீமான் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், "கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம் யார்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டு வழிபட்டதெல்லாம் உண்மை என்றால் சொல்லுங்க யார் காரணம்? பாதிக்கப்படவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்?" என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும், "நடிகருக்கும், தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம், நடிகரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டனர். பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்ற கூட்டம், இன்றைக்கு எங்களை பார்த்து திரள்நிதி கூட்டம் என்று பேசுகின்றனர். மானத்திற்காக போராட வந்த பிள்ளைகள் நாங்கள், ஆனால் தன்மானத்தை இழந்துவிட்டு போராட மாட்டோம்.
சாதி பார்த்து போடாதே ஓட்டு, அது எனக்கு தீட்டு எனப் பேசியவர்கள் நாம். தேர்தலில் ஜாதியை ஒழிச்சுட்டாராம் முதல்வர் விஜய்.. தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரில், திருச்சி கிழக்கில் ஜாதி, மதம் காரணங்களுக்காக போட்டியிட்ட விஜய்யால், எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? உங்களை ஒழிக்காமல் எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்?
நடிக்கும்போது வராத ஜோசப், அரசியலில் இறங்கும்போது வராத ஜோசப், இப்போது முதலமைச்சர் ஆகிவிட்ட பிறகு ஜோசப் விஜய், ஜோசப் விஜய்! ஏன் அந்த முதல் படத்தில் அறிமுகமான போது ஏன் ஜோசப் விஜய் என போடவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications
