அதிமுக கூட்டணிக்கு இனி விஜய் வரப்போவதில்லை.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சொன்ன பாய்ண்ட்!
சென்னை: தவெகவில் செங்கோட்டையன் இணையவிருக்கும் சூழலில், இனி அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் இணைவது தவெகவுக்கு பலம் என்று கூறிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், அதிமுகவுக்கு பின்னடைவு என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்ததாக தவெகவில் இணைய உள்ளார். ஏற்கனவே இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதையடுத்து செங்கோட்டையன் திமுக அல்லது தவெக ஆகிய இரு கட்சிகளில் ஒன்றில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் செங்கோட்டையன், விஜய், புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்தனர். தற்போது ஆலோசனை முடிவடைந்து செங்கோட்டையன் புறப்பட்டுள்ளார். இதன் மூலமாக நாளை அதிகாரப்பூர்வமாக செங்கோட்டையன் தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தவெகவுக்கு இது பலம் தான். செங்கோட்டையன் போன்ற சீனியர் விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதே பெரிய பலம். இது இளைஞர்களுக்கும் உதவியாக இருக்கும். இளைஞர்களை வழிபடுத்துவதில் செங்கோட்டையனின் பங்கு அதிகமிருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு இது பின்னடைவு.
ஏனென்றால் பலரும் இதே பாதையை வரும் காலங்களில் பின்பற்றுவார்கள். இப்போதே கூட்டணி வரிசை தெரிகிறது. தவெகவுடன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் செல்லலாம். திமுகவுக்கு பெரிதாக எந்த நஷ்டமும் இல்லை. திமுகவுக்கு எதிரான வாக்கு வங்கி மேலும் பிரியலாம். இனி அதிமுக கூட்டணிக்கு விஜய் வரப்போவதில்லை என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இனி பாஜக மட்டும்தான்.
இது நிரந்தர அடைப்பு குறியாக மாறியுள்ளது. செங்கோட்டையன் எப்போதும் அனுசரித்து வேலை வாங்க கூடியவர். அது தவெகவுக்கு பலம் தான். செங்கோட்டையனுக்கு பொறுப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சீனியர்களுடன் விஜய் உரையாட முன் வர வேண்டும். செங்கோட்டையனுக்கு விஜய்யுடன் உரையாடுவது தான் கொஞ்சம் சிக்கல். ஏனென்றால் அவர் சீனியர்.. அதுதான் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications