மீண்டும் பாஜக கைவிட்டதா.. தவெகவில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டாரா செங்கோட்டையன்?
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவர் பாஜக பக்கம் செல்லாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதேபோல் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை போல் செங்கோட்டையனையும் பாஜக கைவிட்டுவிட்டதா என்ற விவாதமும் ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் இருந்து கடந்த மாதம் நீக்கப்பட்ட செங்கோட்டையன், நாளை காலை தவெகவில் இணைய உள்ளார். இன்று மாலை தவெக தலைவர் விஜய்யுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில், செங்கோட்டையனின் வரவு தவெகவுக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் 77 வயதாகும் செங்கோட்டையன் என்ன காரணத்திற்காக தற்போது தொடங்கப்பட்ட தவெகவில் இணைய வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செங்கோட்டையன் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் நெருங்கிய உறவில் இருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்புக்கு கெடு விதித்த போதும் கூட டெல்லிக்கு செங்கோட்டையன் பயணம் மேற்கொண்டார்.
மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், செங்கோட்டையன் பாஜகவிலேயே இணைந்திருக்க முடியும். ஈரோடு மாவட்டத்தின் பாஜக முகமாக செங்கோட்டையன் மாறி இருப்பார். ஏற்கனவே கோவையில் வலுவாக உள்ள பாஜக, ஈரோடு மாவட்டத்திலும் நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கலாம்.
ஆனால் செங்கோட்டையனின் தேர்வு தவெகவாக இருக்கிறது. இதனால் பாஜக தலைமை செங்கோட்டையனை கைவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பாக பாஜகவை நம்பி சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் பாஜக கைவிட்டு சென்று, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.
அதேபோல் கடந்த காலங்களில் திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற பல்வேறு நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்து மீண்டும் திமுகவுக்கே வந்தனர். காங்கிரஸில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற விஜயதாரணிக்கு இன்னும் பொறுப்புகள் அளிக்கப்படவில்லை. சரத் குமாருக்கும் எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இதனால் செங்கோட்டையனையும் பாஜக தலைமை கைவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் வேறு வழியின்றி செங்கோட்டையன் தவெக நோக்கி சென்றதாகவும் பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பயணித்த மூத்த நிர்வாகி திடீரென தவெகவில் இணைவது அதிமுகவினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் விஜய்யை நோக்கி இன்னும் சில அதிமுகவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications