செங்கோட்டையன் நீக்கம்.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவிற்கு எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெசேஜ் என்ன
சென்னை: ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை சேர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக செங்கோட்டையன் நேற்று மனம் திறந்து பேசிய நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதை செங்கோட்டையன் நீக்கம் மூலம் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதோடு, வேறு யாரும் இப்படி பேசினால், செங்கோட்டையன் கதிதான் ஆகும் என்ற ரீதியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவே அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை 2016ம் ஆண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை, 2019 நாடாளுமுன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி வசம் கட்சி வந்தது. அதற்கு முன்னதாக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரிய வெற்றி இன்னமும் பெற வில்லை என கவலை அக்கட்சியில் சிலருக்கு இருக்கிறது.

அதிமுக தொடர் தோல்வி
எல்லாருமே ஒற்றுமையாக தேர்தலை சந்தித்த காரணத்தால் 2021 சட்டசபை தேர்தலில் அதிருப்தியையும் மீறி 65 இடங்களில் வெல்ல முடிந்தது என்ற எண்ணமும் சிலருக்கு உள்ளது. ஏனெனில் 2023 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியைஅதிமுக சந்தித்தது. சில தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்காத அளவிற்கு தோற்றுப்போனது.
செங்கோட்டையன் கெடு
2026 தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், கட்சியில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் சில அதிமுகவின் மூத்த தலைவர்களுக்கு உள்ளது. அவர்களில் ஒருவரான அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மனம் திறந்து பேசினார். அப்போது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை சேர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஆகும்
எனினும் நேற்று செங்கோட்டையன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பல அரசியல் ஆர்வலர்கள், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக முழுமையாக வந்துவிட்டது என்றும், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை சேர்ப்பது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாளில் பெரிய சிக்கலாகும் என்றும், எனவே எந்த காரணம் கொண்டும் அவர்களை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன்
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நின்று மோசமாக தோற்றதை சுட்டிக்காட்டியுள்ள சில அரசியல் நிபுணர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரால் இரட்டை இலை இல்லாமல் இப்போது ஜெயிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இதை உணர்ந்தே தைரியமாக எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் சேர்க்க தேவையில்லை என்ற மனநிலையில் இருக்கிறாராம். எனவே தான் செங்கோட்டையனும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. தனக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நீக்கப்படுவார்கள் என்பதை மெசேஜ் ஆக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம்.
பாஜக கருத்து என்ன
இதுபற்றி பாஜகவின் நிலைப்பாடு குறித்து பார்ப்போம். நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், செங்கோட்டையன் பேச்சு என்பது அண்ணா திமுக உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை அவர்களது சொந்த குரலில் தான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சர்களாக இருந்தவர்கள் அவர்களது கருத்தை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும்.
செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம்
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications