செங்கோட்டையன் போர்க்கொடியால் திமுகவுக்கு ‘பூஸ்ட்’.. கொங்கு மண்டலத்தை கவர் செய்வது ஈஸியாம்!
சென்னை: அதிமுகவில், செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலை திமுக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவை பாஜகவுக்கு அடிமைக்கட்சி என விமர்சித்து வரும் திமுக, தற்போது செங்கோட்டையன், டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததை கடுமையாக விமர்சித்து வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூடிய வலுவான என்.டி.ஏ கூட்டணி தேவை என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிலைப்பாடு. அதற்காக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது உரிமைக் குரலாக எழுப்பினார். இநிலையில், அவரைச் சுற்றி அரசியல் களம் சுழன்று வருகிறது.

செங்கோட்டையனின் திடீர் போர்க்குரல், திமுகவுக்கு போனஸாக கிடைத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது திமுகவுக்கு பூஸ்ட் கொடுப்பதாக அமைந்துள்ளது. அதிமுகவில் உட்கட்சிக் குழப்பங்கள் தொடர்வதால், அதிமுகவையும், பாஜகவையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் திமுகவுக்கு புது பாயிண்ட் கிடைத்துள்ளது.
செங்கோட்டையன் - அமித் ஷா
இந்த நிலையில், மன அமைதிக்காக ஹரித்வார் சென்று ராமரை வழிபடுவதாகக் கூறி திங்கள்கிழமை காலை டெல்லி சென்றார் செங்கோட்டையன். டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை மாலை சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து பாஜக தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இல்லை.
உதயநிதி விமர்சனம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரம் பற்றிப் பேசுகையில், "இரண்டு திமுக தொண்டர்கள் சந்தித்தால் கட்சிப் பணி குறித்து பேசுவார்கள். அதே இரு அதிமுக தொண்டர்கள் சந்தித்தால் இருவரும் பேசாமல், எந்த கோஷ்டியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என அவர்களுக்குள் சந்தேகம் இருக்கும். உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித் தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது" எனப் பேசியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "செங்கோட்டையன் டெல்லிக்கு போனது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ராமர் கோயில், ரிஷிகேஷ் போவதாக அவர் கூறினார். செங்கோட்டையன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு தகவல் வரவில்லை. அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் போய் சந்திக்க முடியாது.
திமுகவின் தூண்டுதலின்பேரில் தான் அனைத்து வேலைகளும் நடக்கின்றன. இதன் எல்லா பின்னணிக்கும் காரணம் திமுக தான். வரும் 11-ந் தேதி நான் டெல்லிக்கு செல்கின்றேன். செங்கோட்டையன் எங்கே இருக்கிறார்? என்று என்னிடம் கேட்டு சொல்லுங்கள், அதன் பின்பு அவரை சந்திக்கலாம்" எனத் தெரிவித்தார்.
திமுக கணக்கு?
மேற்கு மண்டலமான கோவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய நிலையில், "2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும்" என கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார். தற்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருப்பதன் பின்னணியில் திமுகவின் கை இருக்குமோ என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications