அண்ணாமலைக்கு 'ஆப்பு'- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்கு காரணமே அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்களும் அவர்களுடன் கை கோர்த்த பாஜக பெண் தலைவரும்தான் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
அதிமுக- பாஜக கூட்டணி சுமூகமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திரும்பிய திசையெங்கும் கண்ணி வெடி வைக்க முயற்சித்தது ஒரு கோஷ்டி. இதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 'ஏக்நாத் ஷிண்டேக்களாக' உருவெடுத்த 2 தலைவர்களும் ஒரு பாஜக பெண் தலைவரும்தான் பிரதான கதா பாத்திரங்கள்.

உஷாரான எடப்பாடி- முறிந்த கூட்டணி: முதலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுத்துவிடலாம்; 20 இடங்களை பாஜக இதர கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கட்டும் என எடப்பாடி பழனிசாமியை 'ஏக்நாத் ஷிண்டேக்கள்' வலியுறுத்தினர். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் ஏற்கவில்லை. அப்படி செய்தால் அதிமுகவின் பிடி இல்லாமலேயே போய்விடும்; அதிமுக அழிவுக்கும் வழிவகுக்கும் என அச்சப்பட்டார். இந்த நிலையில் அண்ணாமலையின் அதீத விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக போய்விட்டது. 20 தொகுதிகளை பாஜக பறிப்பதை சொல்லி கூட்டணியைவிட்டு வெளியேறுவதை விட அண்ணாமலையின் ஏடா கூட விமர்சனங்களை காரணம் காட்டி கனகச்சிதமாக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது அதிமுக. ஏக்நாத் ஷிண்டேக்களின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.
ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பிரமுகர்: ஆனாலும் அதிமுக- பாஜக கூட்டணி முறிவைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேக்களுடன் எப்போதும் ஸ்லீப்பர் செல் கூட்டாளியாக இருக்கும் அந்த பாஜக பெண் பிரமுகரும் இணைந்துவிட்டாராம். அகில இந்திய செல்வாக்கு பெற்ற பாஜக பெண் பிரமுகர் நீண்டகாலமாகவே மாநில தலைவர் பதவி- அதாவது அண்ணாமலையின் இடத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தவர். இப்போது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிவிட்டது.
அஸ்ஸாம் முதல்வருடன் ரகசிய சந்திப்பு: இதனால்தான் தமிழ்நாடு வருகை தந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை ரகசியமாக சந்தித்து இந்த கூட்டணி பேசியிருக்கிறது. அத்துடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலைதான் காரணம் என ஆணித்தரமாக டெல்லியில் போட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் இந்த மூவரணி ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த கோஷ்டியுடன் இணக்கமாக செல்ல காரணமே அஸ்ஸாமில் நடந்து வரும் சில பல 'ஒப்பந்த பணிகள்'தானாம். அதனால் ஹிமந்தவும் சொல் பேச்சு தட்டாத பிள்ளையாக இந்த மூவரணியின் விருப்பத்தை தமது ஆய்வு அறிக்கையாக டெல்லி மேலிடத்திடம் கொடுத்துவிட்டாராம். இதன்பின்னர்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் டெல்லி மேலிடம் இன்னொரு அறிக்கை கேட்டது. அந்த அறிக்கையின் சாராம்சங்களும் அண்ணாமலைக்கு எதிராகவே இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை விரக்தி: இந்த சதிவேலைகளுக்குப் பின்னரே அண்ணாமலையின் பதவி பறிபோகிறது என்கிற பேச்சுகள் எழுந்தன. அண்ணாமலையும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து ஓலை வந்த உடனேயே தமது பதவிக்குதான் சிக்கல் என்பதை புரிந்து கொண்டவராக அண்ணாமலை நேற்று முழுவதும் மாநில தலைவர் பதவி குறித்து விரக்தியாக பேசியிருந்தார்.
அட்டகாசமான ஆட்டங்கள்: தற்போதைய நிலையில் அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் பிரமுகரின் ஸ்கெட்ச் படிதான் அதிமுக- பாஜக ஆட்டங்கள் அட்ட்காசமாக அரங்கேறி இருக்கின்றன. இந்த அணிக்கான முதல் வெற்றி என்பது அண்ணாமலையின் பதவி பறிப்பில் தொடங்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications