தேர்தலுக்கு பிறகு பாஜகவின் உண்மையான முகம் தெரியும்.. உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. வழக்கத்தை விட கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுகளும் கடுமையாக எழுந்துள்ளன. தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் ஸ்டாண்ட் என்னவாக இருக்கும், பாமக திட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுடன் அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
மூத்த பத்திரிகையாளர் மணி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "இன்றைக்கு தேர்தல் வந்தால் திமுக தான் ஜெயிக்கும். அதேநேரம் இன்னும் ஓராண்டிற்குள் இந்த ஆட்சி மீதான எதிர்ப்பலை அதனை மாற்றலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை 2006 போல திமுக குறைவான சீட்களில் வென்று தொங்கு சட்டசபை அமைந்தால் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆட்சியில் பங்கு கேட்கும்.

பாஜக டிமாண்ட்
ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று விட்டால் பாஜகவின் உண்மையாக முகத்தை தமிழ்நாட்டு மக்கள் அன்றைக்கு தரிசிப்பார்கள். அன்றைக்கு அமித் ஷா விளையாடுவார். அதிமுகவுக்கு 100 சீட், பாஜகவுக்கு வெறும் 20 சீட் இருந்தால் கூட பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி, 10 அமைச்சர் பதவிகளை கேட்பார்கள், தமிழ்நாடு நாசமாகப் போகும். ஆனால் அது அன்றைய நிலையைப் பொறுத்தது, தேர்தலுக்கு முன்பாக அதைப் பற்றி பேசமாட்டார்கள்.
பாமக - தவெக
பாமகவும், தவெகவும் கூட்டணி சேர்ந்தால் அது இன்னொரு மக்கள் நலக் கூட்டணி தான். திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தான் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு. பாமகவை தவெக உடன் சேர அமித் ஷா விடமாட்டார். கடந்த 3 தேர்தல்களில் நடந்தது தான் பாமகவுக்கு நடக்கும். ஆயிரம் வீராவேசம் பேசினாலும் பாஜக - அதிமுக கூட்டணியில் தான் இருக்கும். அவர்கள் கொடுக்கும் சீட்களை வாங்கிக் கொள்வார்கள்.
பாமகவின் இரட்டை நிலைப்பாடு
வக்பு சட்டத்துக்கு எதிராக எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரும் ஆதரித்து ஓட்டு போடுகிறார்கள். உண்மையாக வக்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்போது பாமக எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்துக்கே போகாமல் புறக்கணிக்கிறார். எவ்வளவு மோசமான இரட்டை நிலைப்பாடு.
பாமக கட்சி நடப்பதே அன்புமணியை காப்பாற்றத்தான். என்ன தான் திமுக கூட்டணியில் சேரவேண்டும் என ராமதாஸ் விரும்பினாலும், அந்தக் கட்சிக்கு பாஜக மட்டும் தான் ஒரே வழி. கடைசியில் பாஜக - அதிமுக கூட்டணியில் தான் சென்று சேர்வார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications