ராஜ்யசபா சீட் ரேஸ்... வெல்லப் போவது கே.எஸ். அழகிரி? பீட்டர் அல்போன்ஸ்? காங். பரபர விவாதம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ராஜ்யசபா இடைத் தேர்தல் பரபரப்பு தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கான இடைத் தேர்தலில் எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு காங்கிரஸ் தலைவர்களிடையே உருவாகி இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.க்களான வைத்திலிங்கம், கேபி முனுசாமி இருவரும் வெற்றி பெற்றனர். இதனால் ராஜ்யசபா எம்.பி. பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். ஏற்கனவே அதிமுகவின் எம்.பி.யாக இருந்த முகமது ஜான் காலமாகிவிட்டார். இதனால் தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாக உள்ளது.

ஒரு சீட் கேட்கும் தமிழக காங்.
இந்த 3 ராஜ்யசபா இடங்களில் போட்டியிடப் போவது யார்? என்கிற விவாதம் திமுகவில் மட்டுமல்ல காங்கிரஸிலும் களைகட்டி இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டது.

முட்டி மோதும் கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்குதான் இந்த ராஜ்யசபா சீட் என்கிற அடிப்படையில் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழக தலைவர் பதவியிலும் இருப்பார்... ராஜ்யசபா சீட்டும் அவருக்கே எனில் அதெப்படி சரி வரும்? என்கிற குரலும் காங்கிரஸில் எழாமல் இல்லை.

பீட்டர் அல்போன்ஸ்
காங்கிரஸ் கட்சியினரைப் பொறுத்தவரையில் ஒரு ராஜ்யசபா சீட், தங்களுக்குக் கொடுக்கப்பட்டால் நிச்சயம் பொருத்தமானவர் பீட்டர் அல்போன்ஸாகத்தான் இருப்பார்; அவருக்குத்தான் இந்த வாய்ப்பு தரப்பட வேண்டும் என்கிற குரல்கள் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளன. பீட்டர் அல்போன்ஸ் சீனியர் தலைவ மட்டுமல்ல... திமுகவுடன் எப்போதும் இணக்கமான போக்கை கடைபிடிப்பவர். டிவி விவாதங்களில் மதச்சார்பற்ற கொள்கையை வலுவாக ஆதரித்துப் பேசக் கூடியவர்; பாரதிய ஜனதாவுக்கு எதிராக புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக பேசக்கூடியவர்; அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து அனுபவம் பெற்றவர்; அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது பொருத்தம் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்து.

கே.எஸ். அழகிரி ஆதரவாளர்கள் கருத்து
மேலும் பீட்டர் அல்போன்ஸ் கடந்த சில நாட்களாக வெளியிடும் அறிக்கைகளில் திமுக அரசை புகழ்ந்து வருகிறார். திமுகவிடம் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படியான காய்நகர்த்தல்களை பீட்டர் அல்போன்ஸ் மேற்கொள்கிறார் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் கே.எஸ். அழகிரி வட்டாரங்கள். இதுதான் காங். கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்து வரும் பரபரப்பான விவாதம்.












Click it and Unblock the Notifications