அமலாக்கத்துறை கேட்ட கேள்விகள்..மறுத்த செந்தில் பாலாஜி..ஆதாரத்தோடு அரெஸ்ட்..பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது, நினைவில்லை, என்றே பதில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்மீது புகார் அளித்த நபர்கள் யார் என்றே தெரியாது என்று செந்தில் பாலாஜி சொன்ன போது அனைத்து ஆதாரங்களையும் எடுத்து காண்பித்து கேள்விகளை கேட்ட போது தடுமாறித்தான் போனாராம் செந்தில் பாலாஜி. ரெய்டு முதல் கைது வரை நடந்த சம்பவங்கள் என்ன என்று பார்க்கலாம்.

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.
போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோசடி தொடர்பாக மூன்று வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Senthil Balaji arrest: Behind the story ED raid and asks question to Senthil Balaji

இதனையடுத்து இந்த மூன்று வழக்குகளிலும் சென்னையில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகிய நால்வர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுகள் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு, சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது.

கடந்த மே மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக மீண்டும் விசாரணையை நடத்த உத்தரவு பிறப்பித்தது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துக் கொள்ளலாம் என்றும் இது தொடர்பான நிலவர அறிக்கையை இரண்டு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், தலைமைச்செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு பங்களாவில் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 1 மணி வரை பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கும் தெரியாது, நினைவில்லை, ஆடிட்டரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன்மீது புகார் அளித்த நபர்கள் யார் என்றே தெரியாது என்று செந்தில் பாலாஜி கூறவே, அனைத்து ஆதாரங்களையும் வரிசையாக எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காண்பிக்கவே தடுமாறித்தான் போனாராம். புகார் அளித்த நபர்கள் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று பணம் கொடுத்த ஆதாரங்களையும் காண்பித்த போது, அது ஜோடிக்கப்பட்டது என்று கூறினாராம் செந்தில் பாலாஜி. அரசு வேலை தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் பேசிய ஆடியோக்களையும் போட்டு காட்டினார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

புகார் அளித்த நபர்கள் செந்தில் பாலாஜியின் வங்கிக்கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய ஆதாரங்களையும் காண்பித்துள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அதற்கு செந்தில் பாலாஜியால் சரியான பதிலை தர முடியவில்லை. நள்ளிரவு 1 மணியாகிவிட்டது தொடர்ந்து விசாரணை நடத்த கைது செய்கிறோம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறவே, அதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தாராம். அவரது மனைவி, உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு செந்தில் பாலாஜியை கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.

காரில் ஏறிய உடனே செந்தில் பாலாஜி நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறி துடித்தார். கண்ணை மூடி கதறி அழுதார். இதனையடுத்தே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பல மணி நேர சிகிச்சைக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரித்துரைத்துள்ளனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+