புழல் சிறையில் 8 மாதங்கள்.. ஜாமீனுக்காக விடாமல் கோர்ட் கதவுகளை தட்டிய செந்தில் பாலாஜி.. டைம் லைன்
சென்னை:புழல் சிறையில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பலமுறை நீதிமன்ற கதவுகளை தட்டிவிட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. 2023 ஜூன் மாதம் முதல் 2024 பிப்ரவரி வரை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை குறித்து தொகுப்பாக பார்க்கலாம்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஜூன் 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் ஓய்விற்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
2023, ஆகஸ்ட் 12ஆம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்
செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தர். அந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, "செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தபோதும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. நானும் கூகுள் செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தது.
செந்தில் பாலாஜி தரப்பில், "மனுதாரருக்கு பைபாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், brain stroke- க்கை ஏற்படுத்தும்" என்ற வாதத்தை முன்வைத்து வாதிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் 3வது முறையாக மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஏற்கெனவே கூறிய காரணத்தைதான் மீண்டும் கூறியுள்ளனர் என்று தெரிவித்த நீதிபதி, கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தீபாவளி, பொங்கல் என பல பண்டிகைகளை புழல் சிறையில்தான் கொண்டாடினார் செந்தில் பாலாஜி. உடல் நிலையும் மனநிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 20 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அவரது ஜாமீன் மனு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றைய தினம் ஜாமீன் மனு மீது தீர்ப்பளித்தார். செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.












Click it and Unblock the Notifications