செந்தில் பாலாஜி மேடை ஏறியதும் தொண்டர்கள் செய்த காரியம்.. டென்ஷன் ஆன திருச்சி சிவா!
கரூர்: கரூரில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்பி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை பார்த்ததும் மேடையில் இருந்தவர்கள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர். மேலும் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த தொண்டர்களும் ஆர்ப்பரித்தனர். இதனால் மேடையில் பேசிக்கொண்டிருந்த திருச்சி சிவா திடீரென டென்ஷன் ஆனார். உடனே சாரி சாரி என்று சொல்லியபடி திருச்சி சிவாவுக்கு செந்தில் பாலாஜி சால்வை போர்த்தினார். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் திமுக ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி எம்பி திருச்சி சிவா பங்கேற்றார்.

திடீரென டென்ஷன் ஆன திருச்சி சிவா
இந்தக் கூட்டத்தில் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர். திருச்சி சிவா தனது வழக்கமான பாணியில் ஆவேசமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி மேடை ஏறி வந்தததை பார்த்ததும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அதேபோல மேடையில் இருந்த நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக உடனடியாக எழுந்தனர். திருச்சி சிவா பேசிக்கொண்டு இருந்த போதே மேடையில் இருந்தவர்கள் வரிசையாக எழுந்து நின்றனர். இதை பேசிக்கொண்டிருக்கும் போதே பார்த்த திருச்சி சிவா திடீரென டென்ஷன் ஆனார்.
சாரி சொன்ன செந்தில் பாலாஜி
திருச்சி சிவா பேசுகையில், "யாராக இருந்தால் என்ன?.. அவர் பாட்டுக்கு வருகிறார்.. நீங்க ஏன்.. நான் அடிவயிற்றில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.." என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே செந்தில் பாலாஜி தனது கையில் இருந்த சால்வையை எடுத்து திருச்சி சிவாவிடம் சாரி.. சாரி என்று சொல்லியவாறே அவருக்கு போர்த்தினார். இதையடுத்து திருச்சி சிவாவும் தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு சில நொடிகளில் அடங்கிப்போனது.
திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, கரூரில் திமுகவின் முக்கிய புள்ளியாக உள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவும் கரூரில்தான் நடைபெற்றது. முப்பெரும் விழாவில் பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி செய்தார். சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட நாற்காலிகளை போட்டு மாநாடு போல முப்பெரும் விழாவை செந்தில் பாலாஜி நடத்தி காட்டியதாக கரூர் மாவட்ட திமுகவினர் சொன்னதையும் பார்க்க முடிந்தது.
கோடு போட சொன்னால் ரோடு போட்டுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் கூட, கரூர் முப்பெரும் விழாவில் பேசுகையில் செந்தில் பாலாஜி கோடு போட சொன்னால் ரோடு போட்டுள்ளார் என்று அவரை புகழ்ந்து பேசியிருந்தார். இப்படி கரூர் மாவட்ட திமுக மட்டும் இன்றி கொங்கு பகுதியிலும் திமுகவின் முக்கிய நிர்வாகியாக செந்தில் பாலாஜி உருவெடுத்துள்ள நிலையில், அவரது சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் என்பதால் வருகை தந்ததும் உற்சாக வரவேற்பை அளித்தனர் திமுக உடன்பிறப்புகள்.
கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது திடீரென தொண்டர்கள் திசை மாறி செந்தில் பாலாஜியை உற்சாகமாக வரவேற்றதால் திருச்சி சிவா உடனே அப்செட் ஆனாலும் பின்னர், நிலமையை புரிந்து கொண்டு பேசத்தொடங்கினார்.












Click it and Unblock the Notifications