கரூர்ரா? கோவையா? நீங்களே முடிவு பண்ணுங்க.. செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!
சென்னை: திமுக மறுசீரமைப்பு விவகாரம் வேகம் எடுத்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்டாலின் தரப்பில் ஒரு ஸ்பெஷல் ஆஃபர் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜியிடம் கரூர் அல்லது கோவை ஆகிய இரு மாவட்டங்களில், எது வேண்டுமோ அதனை நீங்கள் தேர்வு செய்து சொல்லுங்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிகிறது.
திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வேகம் எடுத்திருக்கின்றன. சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வர ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதற்கேற்ப 78ஆக இருந்த திமுக வருவாய் மாவட்டங்களை, 110ஆக பிரித்து அறிவித்திருக்கிறார். பெரும்பாலும் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 70 வயதை கடந்த 13 முன்னாள் அமைச்சர்களும், 3 முறைக்கு மாவட்டச் செயலாளராக இருந்த 4 பேர் பதவியை இழக்கின்றனர். இதுதொடர்பாக சீனியர்கள் ஸ்டாலினிடம் நேரில் சென்று சந்தித்து முறையிட்டாலும், அவர் கட்சிக்காக இதனை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று கறார் காட்டுகிறார். இதனால் சீனியர்களும் கப்சிப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்டாலின் தரப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜி இருந்தார். தற்போது கரூர் மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என்று ஸ்டாலின் இரண்டாக பிரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் செந்தில் பாலாஜி இருக்கிறார்.
இதனால் செந்தில் பாலாஜியிடம் கரூர் வேண்டுமா அல்லது கோவை வேண்டுமா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு மட்டும் எந்த மாவட்டம் வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டு ஆஃபர் கொடுத்திருப்பது சீனியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் தொகுதியில் விரைவாக இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இதனால் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை கேட்கலாமா அல்லது கொங்கு மண்டலத்தில் வளர வேண்டுமென்றால், கோவையில் இருப்பது தான் சரியாக இருக்கும் என்பது தொடர்பாக செந்தில் பாலாஜி ஆலோசித்து வருகிறார். இதனால் செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமை இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வந்துள்ளன.


Click it and Unblock the Notifications
