செந்தில் பாலாஜி vs ஆதவ் அர்ஜுனா: “நிரபராதி என நிரூபித்துக் காட்டுவோம்”.. சூடாக பதில் கொடுத்த மாஜி!
சென்னை: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஊழல், ஊழல் என்று சொன்னார். நீங்கள் வெறும் வழக்கைத்தான் இப்போது போட்டிருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் நாங்கள் அதைச் சட்டப்படி எதிர்கொண்டு, நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டுவோம்." என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "தமிழ்நாட்டில் கனிம வளத்துறையில் அதிக ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டாஸ்மாக்கில் தான் அதிக ஊழல் நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் எவ்வளவு மது விற்பனையானது, இதன் மூலம் எத்தனை வழக்குகள் அதிகரித்தன என்பது போன்ற தகவல்கள் நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்தால், வட மண்டலத்தில்தான் டாஸ்மாக் விற்பனை அதிகம் நடக்கிறது. அங்கு வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகம் இருப்பதால் விற்பனை அதிகம் நடக்கிறது. கடந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர், உடல்வலிக்காக பலர் குடிக்கின்றனர் எனக் கூறுகிறார். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல்வலி எனக்கூறி விட்டு மதுவை எடுத்துக்கொள்ள முடியுமா?
இன்று ஒரே நாளில் ஒரே கையெழுத்தில் மது விற்பனையை தடை செய்யலாம் என்று நினைத்தால்கூட, பெண்களுக்கு எதிராகத்தான் அதன் விளைவு திரும்பும். இதை சரிசெய்ய மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.
சினிமாத்துறை, டாஸ்மாக் துறையில் ஊழல் நடந்துள்ளது" என்றார்.
அதற்கு பதில் அளித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். இதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால்தான் நாங்கள் படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்பதற்காக 603 கடைகளைக் குறைத்தோம். அது வெறும் பெயரளவிலோ, பேப்பர் அளவிலோ இல்லை. முழுமையாக அந்தக் கடைகள் மூடப்பட்டன. அது தொடர்பான பட்டியல் அமைச்சரின் கையில் உள்ள துறையில் இருக்கிறது. அதை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல, பொதுப்பணித்துறை அமைச்சர் பேசும்போது ஊழல், ஊழல் என்று சொன்னார். நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இந்தச் சட்டமன்றத்தில் தைரியமாகப் பொதுவெளியில் சொல்கிறேன். நீங்கள் வெறும் வழக்கைத்தான் இப்போது போட்டிருக்கிறீர்கள். திமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டும், மக்களிடத்தில் ஒரு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் வெறும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பூதக் கண்ணாடி போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்களுடைய அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.
நன்றாக விசாரிக்கலாம், தீவிரமாக விசாரிக்கலாம், தீர விசாரிக்கலாம். நீதிமன்றத்தில் உங்களுடைய ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம். இறுதி முடிவெடுப்பது நீதிமன்றம்தான். கடந்த காலங்களில் தவறு நடந்ததா, நடக்கவில்லையா என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும்.
யார் தவறு செய்தார்கள், போடப்பட்ட வழக்கு தவறான வழக்கா? பொய் வழக்கா? உண்மைக்குப் புறம்பான வழக்கா? என்பதை நீதிமன்றம்தான் இறுதி முடிவெடுக்கும். அதனால், கடந்த காலங்களில் தவறுகள் நடந்தது என்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் கடந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கிறது.
எனவே, நீங்கள் பதிவு செய்திருக்கும் வழக்கு என்பது உண்மைக்கு மாறான வழக்கு. நீதிமன்றத்தில் நாங்கள் அதைச் சட்டப்படி எதிர்கொண்டு, நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டுவோம். நீங்களும் நீதிமன்றத்தில் அந்த வழக்கை எதிர்கொள்ளுங்கள். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு மக்களுக்கு அது புரியும்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
