செந்தில் பாலாஜி தான் நிரூபிக்கணும்! அந்த கேஸில் அமலாக்கத்துறைக்கு அப்படி என்ன வானளாவிய அதிகாரங்கள்?
சென்னை: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பொறுத்தவரை குற்றமற்றவர் என்பதை குற்றவாளிதான் நிரூபிக்க வேண்டும். அதேபோல் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல், ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது. பெயிலும் எளிதாக கிடைக்காது. இந்த சட்டத்தின் முக்கிய பாய்ண்டுகளை இப்போது பார்ப்போம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் அமலாக்கத்துறையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகாபூபா முப்தி, தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஒருவரை கைது செய்ய எப்போது முடிவு செய்யும். பொதுவாக வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறும். அந்த சோதனையில் சரியான முறையில் சம்பாதித்த பணம். ஆனால் வருமானத்தில் காட்டவில்லை என்றால் அதற்கு அபராதம் விதித்து வழக்கை முடித்துக் கொள்ளும்.
ஆனால் பணம் அல்லது சொத்து முறைகேடாக சம்பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து அவர் சொத்துக்களை குவித்துள்ளார் அல்லது அவரது பினாமி பெயரில் சொத்து உள்ளது என்பது தெரியவந்தால் உடனே வருமான வரித்துறை , அமலாக்கத்துறைக்கு தகவல் அனுப்பிவிடும். சட்டவிரோத சேர்க்கப்பட்ட சொத்து என்பதுதான் என்பது குறித்து போதிய ஆதாரங்களை சேகரிக்க அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும். ரெய்டின் முடிவில் விசாரணையும் நடக்கும். அந்த விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது உறுதியானால் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும்.
கைது நடைமுறை: பொதுவாக அமலாக்கத்துறைக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல், ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் கைது செய்யும் பெரிய அதிகாரம் இருக்கிறது. எதற்காக கைது செய்கிறோம் என்று சொன்னால் மட்டும். வழக்கு தொடர்பான விவரங்கள் அடங்கிய நகலை (இசிஐஆர்)குற்றவாளிக்கு அமலாக்கத்துறை அளிக்கத் தேவை இல்லை. அதாவது எப்ஐஆர் போன்று இந்த நகலை அவருக்கு வழங்க வேண்டிய தேவையில்லை. வழக்கு தொடர்பான உள் ஆவணம் என்பதால், ஒவ்வொரு வழக்கிலும் இசிஐஆர் நகல் வழங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரங்கள்: அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அல்ல எனவே விசாரணைக்கான இந்திய தண்டனை சட்டத்தின் விதிகள் அமலாக்கத்துறைக்கு பொருந்தாது. பொதுவாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றமற்றவர் என்பதை குற்றவாளிதான் நிருபிக்க வேண்டும், குற்றத்தை கண்டிப்பாக அமலாக்கத்துறை நிருபித்தாக வேண்டும் என்ற தேவையில்லை. சந்தேகத்திற்கிடமான சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வாரண்ட் இல்லாமல் சோதனை செய்யலாம். விசாரணையின்போது அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சாட்சியமாகவும் அளிக்கலாம்.
ஜாமீன் எளிதாக கிடைக்காது: ஜாமீன் வழங்க கடுமையான நிபந்தனைகள் உள்ளன. அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தால் ஜாமீன் கிடைப்பது பொதுவாக இந்த வழக்கில் கடினமாகும். பொதுவாக தற்போது வரை நடந்த வழக்குகளை பார்க்கும் போது, நீண்ட நாள் சிறையில் இருந்த பின்னரே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கிடைக்கிறது. செந்தில் பாலாஜி வழக்கில் உடல் நிலை பாதிப்பு என்பது முக்கியமாக இருப்பதால் ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை (வியாழக்கிழமை) தெரிந்துவிடும். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் பெற தீவிர முயற்சி செய்து வருகிறது.
என்ன வழக்கு: 2015ம் ஆண்டு ஓட்டுநர் நடத்துநர் நியமன வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டித்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2015ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 2023ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை செந்தில் பாலாஜி கைது குறித்து அமலாக்கத்துறை புதன்கிழமை மாலை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications