செந்தில் பாலாஜிக்கு 22ஆவது முறை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு.. மார்ச் 4 வரை சிறைதான்! கோர்ட் உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தால் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என அமலாக்கத் துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த போது அவர் அமைச்சராக இருப்பதால் அவர் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது.
அப்போது அவர் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அதாவது செந்தில் பாலாஜியின நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இதையடுத்து அவர் சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு புழல் சிறையில் இருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 22 ஆவது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications