குடும்ப அட்டை.. தனியாக வாழும் கணவனுக்கும் சர்க்கரை அட்டைகள் வழங்கப்படுமா? தமிழக அரசு சொல்வது என்ன
சென்னை: தனியாக வாழும் கணவனுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரசு அறிவிப்பு: இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், "ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று,
சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனியாக வாழும் கணவனுக்கு, தனி ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.. தமிழக சட்டப்பேரவை நடந்துவரும்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் இது சம்பந்தமான கோரிக்கையை விடுத்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
அசோகன்: விவாகரத்து ஆகாமல் தனித்தனியாக வாழும் கணவன், மனைவிக்கு ஒரே ரேஷன் கார்டு இருப்பதால், கணவன் ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனித்து வாழும் கணவனுக்கு தனி ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: சட்டப்பூர்வமாக பிரிந்து தனிக்குடித்தனம் நடத்துபவர்களுக்கு தான், அரசு தனி ரேஷன் கார்டு வழங்க முடியும்.
அசோகன்: இதில், நிதியமைச்சருக்கு தெரியாதது எதுவும் இல்லை.
தங்கம் தென்னரசு: இந்த விவகாரத்தில் எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை"
இவ்வாறாக நேற்று சட்டசபையில் விவாதம் நடந்தது.. அந்தவகையில், விவாகரத்து ஆகாமல் தனித்தனியாக வாழும் கணவனுக்கு தனி ரேஷன் கார்டு வழங்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications