உயிர் குடிக்கும் எமனாக மாறும் டிஆர்பி.. "சீன்" சேர்க்கும் சீரியல்கள்.. சித்ரா மரணம் சொல்வது என்ன?
சென்னை: டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதற்காக சினிமா ரேஞ்சுக்கு ஆபாசமாக சீரியல்களை எடுத்ததன் விளைவும் சித்ராவின் மரணத்திற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
சின்னத்திரையும் தற்போது வெள்ளித்திரை ரேஞ்சுக்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. அப்போதெல்லாம் நதியா கம்மல், நதியா வளையல், நதியா பிராக் என அணிந்து மகிழ்ந்தோம். ஆனால் இப்போது ஒரு துணிக் கடைக்கு சென்றாலும் சரி, நகைக் கடைக்கு சென்றாலும் சரி இந்த துணி அந்த நாடகத்தில் அந்த கேரக்டர் போட்டிருந்தது, இந்த நகை அந்த நடிகை அணிந்திருந்தது என சொல்லும் அளவுக்கு சீரியல் நடிகைகள் மக்களிடம் ரீச்சாகிவிட்டனர்.
சினிமாவை போல் சீரியலிலும் ஓபனிங் சாங், ஹீரோ என்ட்ரி, ஹீரோயின் என்ட்ரி, பாடல், ரொமான்ஸ், இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளிட்டவைகளுடன் ஆபாசமும் ஒட்டி கொள்கிறது. டிஆர்பி ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே சீரியல்களிலும் முத்தக் காட்சிகள், முதலிரவுக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. நிஜமான புருஷன் பொண்டாட்டி ரேஞ்சுக்கு ஹீரோ ஹீரோயினை உரச விடுகிறார்கள்.

கள்ளக்காதல்
சினிமாவுக்கு போனால் அங்கு தான் ஆபாசம் இருக்கிறது என குழந்தைகளுடன் உட்கார்ந்து ஒரு சீரியலையாவது பார்க்க முடிகிறதா. கள்ளக்காதல், பெண்களிடம் வில்லத்தனம், யாரை எப்படி பழி வாங்குவது, கூடவிருந்தே குழி பறிப்பது உள்ளிட்ட நாராசங்களுடன் கதாநாயகனை பார்த்து கதாநாயகி ஜொள்ளுவிடுவதும், கதாநாயகியை பார்த்து கதாநாயகன் கொஞ்சி குலாவுவதுமாக தொடர்கிறது.

டிஆர்பி ரேட்
1980, 90-களில் எடுக்கப்பட்ட சீரியல்களில் கதைக்கரு இருக்கும், காமெடி இருக்கும், ஆனால் தற்போதைய சீரியல்களில் காமெடிதான் இருக்கிறது. இவையெல்லாம் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக இயக்குநர்கள் செய்யும் வேலையாகும். அந்த வேலையே சில நேரங்களில் நடிகைகளுக்கு வில்லனாகிவிடுகிறது. இது கிட்டத்தட்ட எல்லா சீரியல்களிலும் இடம் பெறுவதுதான் வேதனை.

கதிர்- முல்லை ஜோடி
அப்படி ஒன்றுதான் சின்னத்திரை நடிகை சித்ராவின் வாழ்வையே பறித்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை- கதிர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும். இதில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சிகளும் முதலிரவுக் காட்சிகளுமே சித்ராவின் உயிரை குடித்ததாக சொல்கிறார்கள். இந்த காட்சிகளால் கோபமடைந்த ஹேமந்த், சித்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதும், ஒரு கட்டத்தில் சந்தேகப் பேய் தலையின் உச்சத்தில் ஏற, சித்ரா இதற்கு மேல் இவருடன் போராட முடியாது என தனது வாழ்க்கையையே முடித்துக் கொண்டார்.

வலிய திணிப்பு
ஏற்கெனவே பிரபலமான முல்லை- கதிர் ஜோடியை எதற்கு முத்தக் காட்சி, முதலிரவு காட்சி மூலம் மீண்டும் பிரபலப்படுத்த வேண்டும்? அதுவும் சித்ராவுக்கு கல்யாணம் நடந்து விட்ட நிலையில் ஏன் இதை வலியப் போய் திணித்தார்கள்.. இது சித்ராவின் கணவர் மனதில் புகைச்சலைக் கொடுக்கும் என்று கூட யோசிக்க மாட்டார்களா. இந்த நாடகம் என இல்லை, பெரும்பாலான நாடகத்தில் இப்படித்தான் இருக்கிறது. இந்த டிரென்டை மாற்ற வேண்டும்.

மறுத்திருக்கலாம்
கொலை செய்வதைக் கூட ரொம்ப நுணுக்கமாக விவரிக்கிறார்கள்.. படுக்கை அறைக் காட்சிகளுக்கும் குறைவில்லை.. இப்படியே போனால் எப்படி.. சித்ரா போன்ற நடிகைகள் நடிப்புக்காக எதையும் செய்ய வேண்டி வரும் என்றாலும் கூட கல்யாணம் முடிவாகி விட்ட நிலையில் நெருக்கமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.. அவரே வேண்டாம் என்று மறுத்திருக்க வேண்டும். அவரும் அதைச் செய்யவில்லை.

மது போதை
டிஆர்பி ரேட் போதையாலும், மது போதையாலும் இன்று ஒரு பெண்ணின் உயிர் பறிபோயுள்ளது. இதை யார் திருப்பி தர முடியும்? வெறும் 28 வயதுதான் ஆகிறது சித்ராவிற்கு, அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பிற சாதனைகளையெல்லாம் படைத்திருப்பாரே! எனவே சீரியல்களும் சென்சாருக்கு செல்ல வேண்டும். அதிலும் கை வைத்தால்தான் பல குடும்பங்கள் தப்பும்.. பல பெண்களின் வாழ்வும் மிஞ்சும்.












Click it and Unblock the Notifications