ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. மொத்தம் 234 தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் 17 பேரின் பெயரில் 'விஜய்' இடம்பெற்றிருப்பதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அது ஓரளவு உண்மையும் கூட..
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகமும் தனது முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே நேரத்தில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பட்டியலில் கட்சித் தலைவர் விஜய் மட்டுமே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக விஜய்
அதன்படி திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் அவர் களம் இறங்க உள்ளார். அவர் போட்டியிடும் இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே 'நட்சத்திர' தொகுதிகளாக மாறியுள்ளது. இது மட்டுமல்லாமல் விஜய் அறிவித்த பட்டியலில் பல முக்கிய தவெக நிர்வாகிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தியாகராயர் நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ராமன், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, கோபி தொகுதியில் செங்கோட்டையன், திருப்பரங்குன்றம் தொகுதியில் நிர்மல் குமார், திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ், குமாரபாளையம் தொகுதியில் விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
தவெக வேட்பாளர்கள்
அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில் அருள்பிரகாசம், எழும்பூர் தொகுதியில் ராஜ் மோகன், லால்குடி தொகுதியில் கு.ப. கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்தியபாமா, ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி. பிரபாகர், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மிக அதிகமாக கவனிக்கப்படும் விஷயம் என்னவென்றால், 'விஜய்' என்ற பெயர் கொண்ட வேட்பாளர்கள் அதிகமாக இடம்பெற்றிருப்பது தான்.
17 பேரின் பெயரில் 'விஜய்'
மொத்தம் 234 வேட்பாளர்களில் 17 பேரின் பெயரில் 'விஜய்' இடம்பெற்றுள்ளது. வேட்பாளர் பட்டியல் வாசிக்கப்பட்டபோது முதலில் கட்சித் தலைவர் ஜோசப் விஜய் தனது பெயரை அறிவித்த பின்னர், தொடர்ந்து பல இடங்களில் 'விஜய்' என்ற பெயர் மீண்டும் மீண்டும் இடம்பெற்றது. அதன்படி குமாரபாளையம் தொகுதியில் சி. விஜய் லட்சுமி, கும்மிடிப்பூண்டி தொகுதியில் எஸ். விஜய் குமார், மாதவரம் தொகுதியில் எம்.எல். விஜய் பிரபு, ராயபுரம் தொகுதியில் கே.வி. விஜய் தாமு, திருப்போரூர் தொகுதியில் பி. விஜய் ராஜ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
விஜய் பெயர் அதிகம்
மேலும் ஆற்காடு தொகுதியில் ஜி. விஜய் மோகன், மயிலாம் தொகுதியில் ஏ. விஜய் நிரஞ்சன், விக்கிரவாண்டி தொகுதியில் விஜய் வடிவேல், திருக்கோவிலூர் தொகுதியில் விஜய் பரணிபாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எம். விஜய் பாலாஜி ஆகியோரும் 'விஜய்' பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர். இதனுடன் சேலம் தெற்கு தொகுதியில் விஜய் தமிழன் பார்த்திபன், அந்தியூர் தொகுதியில் எம். விஜய் வெங்கடேஷ், பூம்புகார் தொகுதியில் ஜெ. விஜயாலயன், விருத்தாச்சலம் தொகுதியில் எஸ். விஜய், தஞ்சாவூர் தொகுதியில் ஆர். விஜய் சரவணன் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம். விஜய் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications