சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை- டிசி தந்து வெளியேற்றிய நிர்வாகம்?
சென்னை: சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) இன்று போராட்டம் நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்ததால், அவருக்கு டிசி கொடுத்து பாலிடெக்னிக் நிர்வாகம் வெளியே அனுப்பிவிட்டதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னை தரமணியில் இருபாலர் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. பெண்களுக்கு என தனியாக அரசு மகளிர் பாலிடெக்னிக் உள்ள இந்த டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் (WPT)-ல் பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர், தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் முன்பாக போராட்டம் நடத்தினர். அப்போது, WPT கல்லூரியே! தமிழக அரசே! காவல்துறையே! பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு டிசி கொடுத்து வெளியேற்றியதை கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்; தமிழக அரசே! காவல்துறையே! விசாரணை நடத்து! என்கிற முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
பாலிடெக்னிக் மாணவி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள சிலரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்; இது தொடர்பாக மாணவி, பாலிடெக்னிக் நிர்வாகத்திடம் புகார் தந்துள்ளார். ஆனால் பாலிடெக்னிக் நிர்வாகமோ, அந்த மாணவிக்கு டிசி கொடுத்து வெளியேற்றிவிட்டது என்பதை சுட்டிக்காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications