சீனுக்குள் வரும் கனிமொழி.. பாஜக கொடுத்த ‘மாண்புமிகு’ ஆஃபர்? டீல் பேசிய சரத்பவார்! பரபர டெல்லி பாலிடிக்ஸ்
சென்னை: தேசிய அளவில் காங்கிரஸ் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டிருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மகாராஷ்டிரா மூத்த அரசியல் தலைவரான சரத் பவர் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்து வரும் திட்டத்தில் இருக்கும் சரத் பவார், இது தொடர்பாக திமுக தலைமையிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் கனிமொழியிடமும் சரத் பவர் பேசியிருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாஜகவும் காங்கிரசும் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றன. தவறான முடிவுகளால் காங்கிரஸ் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டிருக்கும் நிலையில் பாஜக வேறு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

அதாவது நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் முக்கிய கட்சிகளின் ஆதரவை பெரும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.
சரத் பவார்
அந்த வகையில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் ஆதரவு கிடைத்தால் மத்திய அரசின் நாடாளுமன்ற பலம் மேலும் அதிகரிக்கும் என்ற கணக்கு அந்தத் திட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சரத் பவார் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சரத் பவார் அணிக்கு ஒரு அமைச்சர் பதவியும், திமுகவுக்கு இரண்டு அமைச்சர் பதவியும் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சுப்ரியா சூலே
மேலும் சரத் பவாரின் மகளும் பாராமதி தொகுதி எம்பியுமான சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுக வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியின் எம்பிக்கள் பலம் 20க்கு மேல் இருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என தமிழகத்தில் மிகப்பெரிய எம்பிக்களை கொண்ட கட்சியாக திமுக இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அந்த கட்சியை இணைத்தால் நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் அதிகரிக்கும்.
கனிமொழி
இதற்காக திமுகவின் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து சரத் பவார், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் பேசியதாகவும் சொல்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாக திமுகவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது என்கின்றனர் டெல்லி அரசியல் பார்வையாளர்கள்.
திமுக
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், மக்களவை கூட்டத் தொடரின் இறுதியில் நடைபெற்ற சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் திமுக பங்கேற்றதையும் சுட்டிக் காட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்த தகவல் உறுதியானதாக இருந்தால் தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி
காரணம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை திமுக தவிர்த்து வருகிறது. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியால் திமுக தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், காங்கிரசும் முதுகில் குத்திவிட்டது என திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை அடுத்து காங்கிரஸுக்கு பாடம் புகட்டும் வகையில் தேசிய அரசியலில் பங்கேற்க திமுக முடிவு எடுக்கலாம்.
மத்திய அமைச்சரவை
அதே நேரத்தில் சரத் பவாரும், திமுகவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், நீண்டகால திட்டங்களை கணக்கில் வைத்து திமுக தலைமை முடிவெடுக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் சரத் பவர் கனிமொழியிடம் பேசியது மட்டும் உண்மைதான் என்றும் சொல்கின்றனர் திமுகவினர்.


Click it and Unblock the Notifications
