1 வார்த்தைகூட மோடி சொல்லலயாமே.. புஸ்ஸூனு போச்சே.. கேட்டது கிடைக்காதா? திமுகவில் பரபர
சென்னை: 2 நாட்களுக்கு முன்பு, டெல்லியில் பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி மனு அளித்திருந்தார் இல்லையா? இதுகுறித்த முக்கியமான விஷயம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் சீரமைப்பு பணிகளுக்கும் நிவாரண பணிகளுக்கும் தற்காலிக நிவாரண தொகையாக 7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக 12,659 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய பார்வைக்குழுவிடம் கோரிக்கை வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

புயல் வெள்ளம்: மேலும், புயல் பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு 10 நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. எனவே, மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கையை சமர்ப்பித்ததுமே, தமிழக அரசின் சார்பில் டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்கக்கூடும் என்ற தகவல் வெளியானது. அதனால், முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, வெள்ள நிவாரண கூடுதல் நிதியை கேட்க போவதாக சொன்னார்கள்..
ஆனால், அரசியல் ரீதியாக, பிரதமர் மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை, "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே, மோடியை ஸ்டாலின் சந்திப்பதை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதாகவும், எனவே, அமைச்சர்கள் உதயநிதியையும், தங்கம் தென்னரசுவையும் டெல்லிக்கு அனுப்ப திமுக மேலிடம் யோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
உதயநிதி: இந்தசூழலில்தான், திடீரென தென்மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் பாதிக்கப்பட்டது. அதனால், தென்மாவட்ட வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட நேர்ந்துவிட்டதால், முதல்வரே டெல்லி கிளம்பி சென்றார். பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண உதவிகளை விரைந்து வழங்க கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்.
மிக நம்பிக்கையுடன் மோடியை சந்தித்தாராம் முதல்வர் ஸ்டாலின்.. ஆனால், அந்த நம்பிக்கைக்கேற்ப சந்திப்பு இல்லை என தமிழக அரசின் உயரதிகாரிகள் மத்தியில் தற்போது பேச்சு கிளம்பியிருக்கிறது.
மோடி சந்திப்பு: அதாவது, செஸ் உலக போட்டியை தொடக்கி வைக்க சென்னை வந்த மோடியுடனான ஸ்டாலினின் சந்திப்பில், பிரதமர் மோடி ஏக உற்சாகமாக இருந்தார். சந்திப்பில் பல விஷயங்களை "அப்ரிஷியேட்" பண்ணி ஸ்டாலினை பாராட்டினார் மோடி. ஸ்டாலினுக்கும் அந்த சந்திப்பு மனநிறைவை தந்திருந்தது.
அதே எதிர்ப்பார்ப்பில்தான், இந்த சந்திப்பிலும் இருக்கும் என்று நினைத்தாராம் ஸ்டாலின். ஆனால், அந்தளவுக்கு திருப்தியில்லையாம்.. ஒரு பிரதமரை, ஒரு முதலமைச்சர் சந்திக்கிறார் என்ற முக்கியத்துவம் மட்டுமே இருந்தது. அதனால் மோடியுடனான சந்திப்பில் எந்த பலனும் இல்லை என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்கிற பேச்சுக்கள் கோட்டையில் அதிகாரிகள் மத்தியில் எதிரொலிக்கிறது. நிவாரண உதவியை வழங்குவதில் ஸ்டாலினுக்கு எந்த உத்தரவாதத்தையும் மோடி தரவில்லையாம்.
காங்கிரஸ் கூட்டணி: அதுமட்டுமல்ல, ஸ்டாலின் டெல்லி கிளம்பி செல்கிறார் என்றதுமே, நிவாரண உதவி கோருவதுடன், ராஜ்நாத்சிங் - ஸ்டாலின் சந்திப்பின்போது பேசப்பட்ட அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் திமுக தரப்பில் கிசுகிசுக்கப்பட்டது.. காரணம், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்பட வேண்டும் என்பதே மோடி - அமித்ஷாவின் எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை திமுக நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் உள்ளது போலும்..
இந்த அரசியல் குறித்து திமுகவின் நிலைப்பாட்டை ஸ்டாலின் தெரிவிப்பார் என்றும் திமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுகுறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.. மொத்தத்தில், இந்த இந்த டெல்லி சந்திப்பானது, எதிர்பார்த்த பலனை தரவில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications