"சைலண்ட்" ஆக்ஷனில் திமுக.. எடப்பாடியின் காதுக்கு சென்ற அந்த விஷயம்.. களமிறங்கிய 2 புள்ளிகள்..!
திமுக, அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாகி வருகின்றது
சென்னை: தமிழகத்தில் அடிக்கடி மிரட்டி விட்டு போகும் மழை, ஒமிக்ரான் தொற்று ஒழிப்பு, என பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசு தீவிரம் காட்டி வந்தாலும், மிக முக்கியமான ஒரு விஷயம் கட்சிக்குள் சைலண்ட்டாக நடந்து வருகிறதாம்.. விடுமா அதிமுக? அந்த கட்சியும் தன் பங்குக்கு பட்டைய கிளப்ப ஆரம்பித்துவிட்டது.. எல்லாம் உள்ளாட்சி தேர்தல் பற்றின விஷயம்தான்..!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு சுப்ரீம்கோர்ட்டும் ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் அனேகமாக பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக
இதையொட்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. அந்த வகையில், திமுக பெருத்த ஆர்வம் காட்டி வருகிறது.. பொதுவாக இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது வழக்கமான ஒன்று.. ஆனாலும், இந்த முறை திமுக தீவிரம் காட்ட காரணம், முக்கிய தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதுதான்.

10 தொகுதிகள்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றினாலும், கோவை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மண்ணை கவ்வியது.. கோவையில் உள்ள 10 தொகுதிகள் இருந்தபோதிலும் திமுக வெற்றி பெறவில்லை... அதனால்தான், கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.. அதனால்தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சரை பொறுப்பில் நியமித்துள்ளார்.

சைலண்ட் மூவ்
இப்போது விஷயம் என்னவென்றால் சைலண்ட்டாக காய் நகர்த்த துவங்கிவிட்டதாம் திமுக.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திமுகவினரிடம் நேர்காணலை நடத்தி வருகிறார்களாம் திமுக மாசெக்கள்.. இன்று சென்னையில் மாவட்ட அலுவலகங்களில் சத்தமில்லாமல் நேர்காணல் துவங்கியிருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள திமுக அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துள்ள நிலையில், அதிமுகவும் சுறுசுறுப்பைக் காட்டத் துவங்கியுள்ளது.

ஓபிஎஸ்
தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ், கே.பி.முணுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசித்துள்ளார். இதில், ஓபிஎஸ் தவிர மற்ற இருவரும் பல்வேறு முக்கிய கருத்துக்களை எடப்பாடியிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. அதாவது, "90-95 சதவீத இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டிருக்கிறது. அதே அளவில் நாமும் போட்டியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததால் மக்களிடம் ஆளும் கட்சி மீது அதிருப்தி இருக்கிறது. அதை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டுமானால் திமுக போட்டியிடுவதற்கு இணையாக நாம் போட்டியிட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கு மாறாக பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்தோமேயானால் அந்த இடங்களில் எல்லாம் திமுக ஜெயித்து விடும். அது நமக்கு பின்னடைவாகும். அதனால், 3 சதவீத இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தரலாம். ஒத்து வரவில்லையெனில் நாம் தனித்து போட்டியிடுவோம் " என்று வலியுறுத்தியுள்ளனராம்.. ஆனால், இந்த விஷயத்தில் ஓபிஎஸ்சின் கருத்து மாறுபட்டுள்ளதாம்... பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்கிடக் கூடாது. பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும். அவர்களுக்கு 5 சதவீத இடங்கள் தருவதில் தவறில்லை " என்று சொல்லியிருக்கிறாராம் ஓபிஎஸ்.

என்னாகும்?
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை பாஜகவுக்கு நெருக்கமானவராக கருதப்படுவதால், அவ்வளவு சீக்கிரம் கூட்டணியில் இருந்து விலக விட்டுவிடுவாரா என்று தெரியவில்லை.. பாஜகவை விட்டுவிட்டால் அது தனக்கு அதிமுக கட்சிக்குள் மேலும் சறுக்கலை ஏற்படுத்தி விடும் என்பதை ஓபிஎஸ் உணராமல் இல்லை.. எப்போதுமே ஓபிஎஸ் ஒன்று நினைத்தாலோ, அல்லது ஏதாவது கருத்து சொன்னாலோ, அது ஏமாற்றத்திலேயே முடிந்துவிடும்.. பெரும்பாலும் எடப்பாடியின் கையே ஓங்கிவிடும்.. இந்த விஷயத்திலாவது ஓபிஎஸ் நினைத்தது நடக்குமா? அல்லது சீனியர்களின் கருத்து எடுபடுமா? அல்லது இந்த தேர்தலிலும், திமுக டாப் கியர் போட்டு மேலே சென்றுவிடுமா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications