ஏலே டைரக்டரே.. என் வயிறு எரியுதுலே! வெற்றி மாறனை வெளுத்து வாங்கும் சிம்பு ரசிகர்கள்! என்னாச்சு?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷல் ஆக அந்த படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியான நிலையில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 'ஃபயர்' என்ற பெயரில் அந்த க்ளிம்ப்ஸ் வீடியோ தீபாவளிக்கு வெளியான நிலையில் அதில் இடம்பெற்ற பின்னணி இசை கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தற்போது வரை கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை படத்தின் சில பாத்திரங்களையும், அந்த பின்னணியையும் இணைத்து அரசன் என்ற பெயரில் வெற்றிமாறன் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இதில் சிம்பு நாயகனாக நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள ராமர் எடிட்டிங் கவனிக்கிறார். சண்டை பயிற்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்திருக்கும் நிலையில் பட வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
பொங்கல் அல்லது கோடை விடுமுறையை குறிவைத்து இந்த படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.
ஆனால் யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல ஃபயரு என்ற தலைப்புடன் அந்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ஃபயரு ஃபயரு ஃபயரு தாஸ் அண்ணே வந்தாலே ஃபயரு என கானா பாடலோடு நெருப்பு பின்னணியில் சிம்பு நடந்து வருவது போலவும் சில ஆக்ஷன் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
இதை அடுத்து அந்த படத்தில் சிம்புவின் பெயர் தாஸ் என இருக்கலாம் என சொல்லி வருகின்றனர். இந்த வீடியோவின் பின்னணி இசை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பட அறிவிப்பின்போது வெளியான வீடியோவின் பின்னணி இசை மிரட்டலாக இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள க்ளிம்ப்ஸ் வீடியோவில் பின்னணி இசை படு சொதப்பலாக இருக்கிறது.
மேலும் 'மாமா மாமா' என்ற பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து கானா பாடலாக வெளியிட்டு இருக்கிறார்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சிம்புவின் மிரட்டலான தோற்றத்திற்கு அனிருத் இசையமைத்தாரா அல்லது வெற்றிமாறனே இசையமைத்தாரா என கேட்கின்றன ரசிகர்கள்.
இதுமட்டுமல்லாமல் சிம்புவின் பழைய பாடல்களில் இருந்து மாஸ் பிஜிஎம்களை எடுத்து இந்த வீடியோவுடன் ஒப்பிட்டு வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அனிருத் கல்யாணத்துக்கு சென்று விட்டதால் வேறு இசையமைப்பாளரை வச்சு இசையமைச்சாங்களா? இல்ல அனிருத்தே படத்தில் இருந்து விலகி விட்டாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோவால் தீபாவளிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என காத்திருந்த அசுரன் பட குழுவுக்கு இந்த விமர்சனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




Click it and Unblock the Notifications
